தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி அவர்களின் வழிகாட்டலில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட புளியாவத்தை இன்ஜஸ்றி உள்ளிட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளிலும் அதனை அண்டிய நகரங்களிலும் இன்று (06) தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன் மக்கள் கொரோனா தொற்று அவதானம் தொடர்பாக ஒலிபெருக்கிகள் ஊடாக தெளிவூட்டல்களும் செய்யப்பட்டன.
இந்த பிரதேசங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதனால் பொகவந்தலா, இன்ஜஸ்றி, புளியாவத்தை,|போடைஸ், பட்டல்கலை உள்ளிட்ட நகரங்களுக்கும் இன்று நோர்வூட் பிரதேச சபையினால் தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தன. குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற தெளிவூட்டல்களும் இடம்பெற்றன.
ஹட்டன் டிக்கோயா பகுதியில் உள்ள 29 பேருக்கு கொரோனா தொற்று கடந்த 04 ம் திகதி இனங்காணப்பட்டதனை தொடர்ந்து இன்ஜஸ்ரி 319 ஐ கிராம சேவகர் பிரிவு மற்றும் போடைஸ் ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட போடைஸ், பார்தபோட், பிங்போனி, என்பீல்ட் இன்ஜஸ்ரி, ஆகிய பகுதிகளில் கடந்த (03) திகதி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிலிங்போனி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் மேற்கொண்ட 180 பி.சி,ஆர் பரிசோதனையினை தொடர்ந்து குறித்த பகுதியிலிருந்து சுமார் 29 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இன்ஜஸ்ரி பகுதியிலிருந்து 19 பேரும், என்பீல்ட் பகுதியிலிருந்து 05, போடையஸ் பகுதியிலிருந்து 05 பேரும் அடையாளம் காணப்பட்டன.
குறித்த பகுதிக்கு உள்செல்வதற்கோ அங்கிருந்து வெளியேறுவதற்கோ முடியாதவாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கி பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கே.சுந்தரலிங்கம்