அரசின் நிவாரண பொதிகள் எங்கே? நாளாந்த வருமானத்தில் வாழ்பவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

0
173

“அரசு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாலும், நாடு முடக்கப்பட்ட நிலையிலே உள்ளது. நாளாந்த வருமானத்தில் வாழ்பவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசின் நிவாரண பொதிகள் எங்கே?” தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி.

அரசாங்கம் பயணக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. அதன் மூலம் முழு நாடும் மூடப்பட்ட நிலையில் இல்லை என்ற விளக்கத்தை அரசு கூறப்பார்க்கின்றது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை. பயண கட்டுப்பாடு என்பதில், அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமைய முழு நாடும் முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இது எதிர்வரும் மாதம் ஏழாம் திகதி வரை தொடர்கின்றது. இவ்வாறான கட்டுப்பாடு இன்றைய சூழலில் மிக முக்கியமானதே ஆகும். அதிலே மாற்று கருத்துக்கு இடம் கிடையாது.

கோவிட் தொற்றை கட்டுப்படுத்த, இக்கட்டுப்பாடு மிகவும் அவசியமானதென்பது உண்மை தான். எனினும் நாடு முழுவதும் இருக்கின்ற நாளாந்தம் தொழில் செய்து அந்த நாளாந்த வருமானத்தில் வாழ்பவர்களின் நிலைமையை கவனத்திற்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில் உள்ளவர்கள் நகரங்கள், கிராமங்கள் மற்றும் தோட்டங்கள் என நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ளனர். இவர்களுக்கான குறைந்தபட்ச உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடப்பாடு ஆகும். அந்த வகையில் அரசாங்கம் ரூபா 5000 பெறுமதியான நிவாரண பொதி வழங்குவதாகவும், அதே போல ரூபா 10000 பெறுமதியான நிவாரண பொதி வழங்குவதாகவும் குறிப்பிடுகின்றது. ஆனால் அவற்றை நடைமுறையிலே காணக்கூடியதாக இல்லை.

அரசு மனிதாபிமான ரீதியில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளை தொடர்புபடுத்தி நிவாரண பொருள் வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். அதிலும் விசேடமாக தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற மக்கள் தொடர்பாக கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். அதனை விடுத்து வர்த்தக நிலையங்கள் திறந்து இருக்கின்றது, ச.தொ.ச கடைகள் திறந்திருக்கிறது, வாகனங்கள் மூலம் பொருள் விநியோகம் நடைபெறுகின்றது என குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. அவற்றில் இருந்து தமக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பணத்திற்கு எங்கே போவார்கள்?

எனவே மேலும் நிலைமை மோசமடையம் முன்னர், நாடு முழுவதிலும் உள்ள நாளாந்த வருமானத்தில் வாழ்பவர்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கும் வேளை திட்டத்தை வீடு வீடாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதுவரை செய்த ஏதையும் உருப்படியாக செய்யாத இந்த அரசாங்கம், இதனையாவது அலட்சியப்படுத்தாமல், மக்கள் உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here