இலங்கை அணியை வெற்றி பெறுவதற்கு இந்திய C அணியே போதும்…..!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரான காம்ரான் அக்மல், இந்திய அணி தற்போது இருக்கும் நிலையில் இலங்கை அணியை வெற்றி பெறுவதற்கு அந்நாட்டு C அணியே போதும் என்று கூறியுள்ளார்.

இலங்கைக்கு வரும் ஜுலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த தொடர் ஜூலை 13-ஆம் திகதியில் இருந்து 27-ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடனான தொடர் நடைபெறும் அதே சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளதால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கும், இளம் இந்திய படையை இலங்கைக்கும் அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அதே சமயம், இந்த இலங்கை தொடரில் கோஹ்லி மற்றும் ரோகித் இருவருமே இல்லாததால், இந்திய அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் எகிறியுள்ள நிலையில், இந்தியாவின் இளம் வீரர்கள், இலங்கை அணியை சமாளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான காம்ரான் அக்மல், இந்திய கிரிக்கெட் அணி சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த அணியாக உருவெடுத்துள்ளது. இந்திய அணியின் இந்த முன்னேற்றத்திற்கு முன்னாள் கேப்டன் டோனியும், இந்நாள் கேப்டன் விராட் கோஹ்லியுமே முக்கியம் காரணம்.

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

என்னை பொறுத்தவரை இந்திய C அணி இலங்கை சென்றால் கூட இந்திய அணி தான் வெற்றி பெறும், அந்த அளவிற்கு இந்திய அணி வலுவாக உள்ளது என்று கூறியுள்ளார்.