16 மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவும் நடிகர்!

0
120

கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக 16 மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார். இதுபோன்ற உதவிகளினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை சோனு சூட் பெற்றார். இந்தியாவில் நிலவும் கரோனா 2 வது அலையிலும் பலருக்கும் உதவி செய்து வருகிறார் சோனு சூட்.

நாட்டின் பல பகுதிகளில் பெரிய மருத்துவமனைகளில்கூட ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் மக்களில் சிலருக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்தச் சிக்கலைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்து, பதினாறு மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட். இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறியதாவது:

எல்லா மாநிலங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ முயற்சி செய்தேன். 150-200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும். தற்போது ஆந்திராவின் இரு பகுதிகளில் நிறுவப்படுகிறது. இந்த மாத இறுதியிலிருந்து இப்பணிகள் முழுவீச்சில் நடைபெறும். 16 மாநிலங்களில் செப்டம்பரில் இப்பணிகள் நிறைவுபெறும்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இனி ஏற்படாது. சிலநேரங்களில் நீண்ட தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலைமை நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. சிலசமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதன்மூலம் அப்படியொரு நிலைமை இனி ஏற்படாது என நம்புகிறேன். இந்தியா முழுக்க 700 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளோம். ஆனால் அது தற்காலிக ஏற்பாடு தான். ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளால் யாருக்கும் இனி பிரச்னை ஏற்படாது. எதற்காக 3 வது, 4 வது அலை தொடங்கும்வரை காத்திருக்க வேண்டும்? கொரோனா பாதிப்பு முடிவடைந்தாலும் கிராமங்களிலும் பக்கத்து மாவட்டங்களிலும் எப்போதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here