நடமாட்டக்கட்டுப்பாடு தளர்வு. – கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்.

0
188

சுமார் ஒரு மாதம் வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டத்தடை இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று தளர்த்தப்படும் நடமாட்டத்தடை எதிர்வரும் 23ஆம் திகதி 11 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

அது எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை ஆரம்பமானதையடுத்து நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21ஆம் திகதி நடமாட்டத்தடை அமுல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரையில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டது.

மேல் மாகாணத்திலும் ஏனைய மாகாணங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சகல மாகாணங்களிலும் ஒரு வீட்டிலிருந்து இருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும்.

மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் பொது போக்குவரத்து சேவைகளில் 50 சதவீதமானோர் பயணிக்க முடியும். எனினும் மேல் மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் வாடகை வாகனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.

அரச மற்றும் தனியார் சேவை நிலையங்களுக்கு தேவையான அளவு சேவையாளர்களை அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானித்து கடமையில் அமர்த்த வேண்டும். அத்துடன், வீடுகளில் இருந்து சேவையாற்ற கூடிய வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் நிறுவனங்களின் கூட்டங்களில் 10 பேர் கலந்து கொள்ள முடியும். மேல் மாகாணத்தில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் தவிர்ந்த பகுதிகளில் 25 பேருடன் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் மேல் மாகாணத்தில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் உயிர் குமிழி முறைமை பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிறுவனங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும். தேவையான பணியாளர்கள் மாத்திரமே நிதி நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும்.

மொத்த விற்பனைகளுக்காக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும், கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாராந்த சந்தைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

பதிவு செய்யப்பட்ட நடமாடும் வர்த்தகர்களுக்கு பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில்லறை வர்த்தக நிலையங்களையும், சிற்றுண்டிசாலைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அவற்றின் மொத்த அளவில் 25 சதவீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு ஒரு நேரத்தில் ஒருவர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும்.

கல்வி அமைச்சினால் நடத்தப்படும் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய சகல பரீட்சைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியில்லை. எனினும் 10 பேரின் பங்குப்பற்றுதலுடன் பதிவு திருமணத்தை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மரண சடங்குகளில் ஒரு சந்தர்ப்பத்தில் 15 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். இறந்தவர்களின் சரீரம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக்கிரியைகள் நடத்தப்பட வேண்டும்.

தனியார் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், நூலகங்கள், திரையரங்குகள், மக்கள் ஒன்று கூடுதல் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என்பனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here