டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

மன்னார், வவுனியா, கிளிநொச்சி ,முல்லைத்தீவு, மாத்தளை ,நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய, அவிசாவளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பொது வைத்திய சாலைகள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

ஆனால் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கை உள்வாங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.
கடந்தகால அரசாங்கங்களின் அமைச்சரவையில் மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைய அரசாங்கத்தில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை.
இதனால் மலையகத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் பாரிய பின்னடைவை அடைந்துள்ளன.

இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் ஓரளவு நவீன மயப்படுத்தப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து இந்த வைத்தியசாலையில் காணப்படுகின்ற முக்கிய குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோ. ஸ்ரீதரன் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.