கொரோனா தொற்றிலிருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆறுமுகன் ஜெயராஜன் கேட்டுக்கொண்டார்.லிந்துலை பகுதியில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
லிந்துலை பொது சுகாதார பிரிவில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் ஆறு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்கள். அது மட்டுமன்றி நூற்றுக்கணக்கானோர் தொற்று உள்ளாகி உள்ளார்கள். இந்நிலை எமது மக்கள் சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதிலும் அசமந்த போக்கினையே காட்டுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்திற்கு இம்முறை ஐம்பதாயிரம் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் தற்போது பல இடங்களில் போடப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக நாங்கள் சுமார் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் செலுத்தினோம் இம் முறை 17 கிராம சேவகர் பிரிவுகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று மூன்று நிலையங்களிலும் நாளை (09) முதல் எதிர்வரும் 14 திகதி வரை 17 நிலையங்களில் தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே இன்று இறந்தவர்களில் பெரும் பாலோனோர் வயோதிபவர்கள் என்பதனால் 60 வயத்திற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பக்கவிலைகள் மிகக் குறைவாகவே இருப்பதனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
மலையகப்பகுதியில் உலாவி வரும் பல்வேறு வதந்திகள் காரணமாகவும் அசட்டுத்தனம் காரணமாக பலர் தடுப்பூகள் போடுவதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் குடும்பத்தில் உள்ளவர்களே பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே குறித்த தடுப்பூசியினை செலுத்தி தங்களது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறு சுகாதார பிரிவினை நேர்ந்த பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்