மலையக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை 18 வயது குறைந்தவர்களாயின் அவர்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்பக்கூடாது

” சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். மலையக சிறுமியின் மரணத்துக்கு நீதி அவசியம். அதற்கான அழுத்தங்களை நாம் கொடுப்போம்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அசாதாரண நிலைக்கு இட்டு சென்றுள்ளது. அத்துடன், பல்வேறு பிரதேசங்களில் செறிந்து வாழும் பெருந்தோட்ட மக்களை இத் தொற்றிலிருந்து பாதுகாப்பது எமது கடமையாகும். அதற்கென அவர்களின் பாதுகாப்பிற்காக தற்போது பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இதன் அடிப்படையில் செப்டேம்பர் மாதம் இறுதிற்குள் 3 இலட்சம் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு அரசாங்கம் முதற்கட்டமாக 25, 000 கொரோனா தடுப்பூசிகளை வழங்க சம்மதம் தெரிவித்த போதிலும் இத்தொகையை அதிகரிக்கும் படி நாம் கேட்டு கொண்டதற்கு அமைய 50,ஆயிரம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டோம்.

இம்மாவட்ட மக்களுக்கு இதுவரை முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசியாக 1லட்சத்து68 ஆயிரத்து406 தடுப்பூசிகளை மக்கள் முழுமையாக பெற்றுள்ளார்கள். இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 96 % வீதமும், ஆசிரியர்களுக்கு 99 % வீதமும் செலுத்தப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டால் இறந்து விடுவார்கள் என சமூக வலைத்தளங்களில் தவறான பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது.

எனினும் அது உண்மைக்கு புறம்பான பொய்யான வதந்தியாகும். எனவே மக்கள் தமது நலன்களில் அக்கறை கொன்டு பாதுகாப்பாக வாழ இத்தடுப்பூசிகளை பெற்றுகொள்வது அவசியமாகும் என்பதை உணர்ந்துள்ளனர்.

எனவே நுவரெலியா மாவட்டத்தில் 3 இலட்சம் தடுப்பூசிகளை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் செலுத்தும் நடவடிக்கை நிறைவடைய வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் அண்மையில் இடம்பெற்ற மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்த அமைச்சர் இனிவரும் காலங்களில் மலையக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை 18 வயது குறைந்தவர்களாயின் அவர்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்பக்கூடாது என வழியுறுத்துவாதவும் கூறினார்.

மேலும் இதற்கு மாற்று நடவடிக்கையாக எமது தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் ஊடாகவும் , பிரஜாசக்தி நிலையத்தின் ஊடாகவும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்த அவர்,

உயிரிழந்த அச்சிறுமியின் ஆத்மா சாந்தி அடைய எதிர்வரும் வியாழக்கிழமை டயகமைக்கு நாம் நேரடியாக சென்று நினைவேந்தல் நகழ்வொன்றை நடத்தவுள்ளதாகவும், அன்றைய தினம் மலையக உறவுகள் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.