ஹிசாலினி மரணம் குறித்து தாய் உட்பட 6 பேரிடம் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி மரணம் தொடர்பில் அவரது தாய் அடங்கலாக 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட இரண்டு விசேட விசாரணை குழுக்கள் நேற்று டயகம பகுதிக்கு சென்று விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாயிடம் இரண்டாம் நாளாகவும் நேற்று காவல்துறையினர் சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். இது தொடபில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அதேநேரம் குறித்த சிறுமியை முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து சென்ற தரகரிடம் இன்று காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.