மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு கடும் மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது.
நேற்று இரவு டிக்கோயா கிளங்கன் பகுதியில் வீசிய கடும் காற்றினால் அந்த பகுதியில் மரக்கிளையொன்று முறிந்து அதிசக்தி வாய்ந்த மின்கம்பிகள் மீது விழுந்ததனால் மின்கம்பம் மற்றும் தொலைபேசிக்கம்பம் ஆகியன முறிந்து வர்த்தக நிலையம் ஒன்றின் மீது வீழ்ந்துள்ளன.
வர்த்தக நிலையத்திற்கு சிறிய அளவில் சேதமேற்பட்டுள்ளதுடன் கிளங்கன் பிரதேசத்தில் பல பகுதிகளுக்கு நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
தற்போது தடைப்பட்ட மின்சாரத்தினை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மின்சாரசபையினர் எடுத்து வருகின்றனர். இதேவேளை தொலைபேசி இணைப்புக்களை வழமைக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக மழையுடன் கடும் காற்று வீசி வருவதனால் மரங்களுக்கும் மலைகளுக்கும் அருகாமையில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
கே.சுந்தரலிங்கம்