இரத்தினபுரியில் காணாமல்போன சிறுவன் நல்லதண்ணி பிரதேசத்துக்கு சென்று மீண்டும் காணாமல்போயுள்ளார்.

இரத்தினபுரியில் காணாமல்போன சிறுவன், சிவனொளிபாதமலைக்கு சென்றுள்ளதாக தெரியவந்ததையடுத்து, காவல்துறையினர் அதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 26 ஆம்திகதி இரத்தினபுரி, பலாபத்தல வீதி ஊடாக சிவனொளிபாதமலை உச்சிக்கு பிற்பகல் ஒரு மணியளவில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிவனொளிபாதமலையில் இருந்த காவலாளி ஒருவர், இந்த சிறுவனின் செயற்பாடு தொடர்பில் சந்தேகம் கொண்டு அவரிடம் வினவியுள்ளார்.

அதன்போது, தான் வீட்டாருக்கு தெரியாமல் சிவனொளிபாதமலைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்போது, சிவனொளிபாதமலை வழிபாட்டுத்தலம் மூடப்பட்டுள்ளதால் உள்ளே சென்று வழிபடுவதற்கு அனுமதி வழங்க முடியாது என அங்கிருந்த காவலாளி தெரிவித்துள்ளார்.

அதன்போது, சிறுவனிடம் மேலும், வினவியபோது, தான் மஹரகமவிலுள்ள நண்பரொருவரை சந்திக்க செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், ஹட்டன் – நல்லதண்ணி வழியாக கீழிறங்கியுள்ள நிலையில், மாலை 5 மணிக்கு நல்லதண்ணி பிரதேசத்துக்கு சென்று மீண்டும் காணாமல்போயுள்ளார்.

இச்சிறுவன், இலங்கை வரைபடம் ஒன்றை வாங்க வேண்டும் என வீட்டாரிடம் கூறியுள்ளதாக இரத்தினபுரி காவல்நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கமைய, சிறுவன் ஏதேனும் ஒரு திட்டத்துடன் வீட்டிலிருந்து வெளியேறி, இலங்கை வரைபடத்தை பயன்படுத்தி மஹரகமவிலுள்ள தனது நண்பனை காணச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறே, குறித்த சிறுவனின் புகைப்படம் மற்றும் தகவல்கள் சிவனொளிபாதமலைக்கு அருகிலுள்ள அனைத்து சமயஸ்தலங்கள் மற்றும் விடுதிகளுக்கு வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேற்படி சிறுவன் தனது சகோதரனுடைய கைப்பேசியில் இதற்கு முன்னதாக இருந்த சிம் அட்டையை நீக்கியுள்ளதுடன், கைப்பேசியின் அடையாள எண்ணை (IMEI) குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

இதன்காரணமாக காணாமல்போயுள்ள சிறுவன் பயன்படுத்தும் கைபேசியின் சமிக்ஞை அறிக்கையை பெற்றுக்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, அச்சிறுவன் பயன்படுத்தும் கைப்பேசியின் குறியீட்டு எண்ணை பெற்றுக்கொள்ள, அக்கைபேசியின் முன்னர் இருந்து சிம் அட்டைக்குரிய சேவை வழங்குநர் நிறுவனத்தில் உதவியை நாடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி – படுஹேன பிரதேசத்தைச் சேர்ந்த நுவன் லக்ஷான் அபேரத்ன என்ற 14 வயது  சிறுவன் அண்மையில் காணாமல்போனார். அவரது தந்தையொரு காவல்துறை சார்ஜன்ட் ஆவார்.

இச்சிறுவன் கடந்த சனிக்கிழமை (24) இரவு தனது மூத்த சகோதரனுடன் உறங்கச் சென்றதாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து தனது சகோதரனின் கைபேசி, ஆடை அடங்கிய பை மற்றும் 20, 000 பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

இச்சிறுவன் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லும் காட்சி,  அருகிலிருந்த சிசிரீவி கெமராக்களில் பதிவாகியிருந்தது.

எனினும், அவர் என்ன காரணத்துக்காக வீட்டிலிருந்து வெளியேறினார் என்பது இன்னமும் மர்மமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவர் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால், அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்

COPIED HIRU