ஆப்கனின் காந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலத்தைத் தொக்கவிட்டபடி தலிபான்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ தலிபான்களின் அதிகாரபூர்வ ஆங்கில ட்விட்டர் பக்கத்தில் (தலிப் டைம்ஸ்) தான் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவிற்குக் கீழே, நமது விமானப் படை. இப்போது இஸ்லாமிக் எமிரேட்ஸின் விமானப்படையின் ஹெலிகாப்டரில் காந்தஹார் நகரை ரோந்து செய்தபோது. என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் ஒரு சடலம் தொங்குவது தெளிவாகத் தெரியும் நிலையில் அதுகுறித்து ஒரு சிறிய வார்த்தை கூட தலிபான்கள் கூறவில்லை. அந்த சடலம் அமெரிக்க வீரருடையதா இல்லை பொதுமக்களுடையதா என்ற விவரம் ஏதுமில்லை. இருப்பினும் அதனைப் பகிர்ந்து வரும் பலரும், இந்த வீடியோவில் இருப்பது உண்மையிலேயே ஒரு மனிதர் தானா இல்லை ஏதும் பொம்மையா என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெட் க்ரூஸ், இந்த அச்சுறுத்தும் வீடியோ, ஆப்கானிஸ்தானில் ஜோ பைடனால் நடந்த பேரழிவின் ஒரு சாட்சி. அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் தலிபான்கள் பயணிப்பதும் அதில் ஒருவரை தொங்கவிட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.