மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி திட்டங்களுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

0
188

” மலையக மக்களின் இருப்பை சிதைத்து, வாழ்வாதாரத்தை அழித்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்துக்கொள்வதற்கான நகர்வையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இம்முயற்சியை முறியடித்து, எம் மக்களின் இருப்பை பாதுகாத்துக்கொண்டு – முன்னோக்கி பயணிப்பதற்கு மலையக இளைஞர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவே இருக்கின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (08.09.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை பிரதான நோக்கமாகக்கொண்டே நாட்டில் தனிமைப்படுதல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. மக்களும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மக்களின் வாழ்க்கையை பாதிப்பும் விதத்திலான மோசமான தீர்மானங்களை எடுத்து, அவற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. குறிப்பாக மலையக சமூகத்துக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. எமது மக்களின் இருப்பை சிதைத்து, வாழ்வாதாதரத்தையும் அழித்து, எதிர்காலத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே தீர்மானங்கள் அமைந்துள்ளன.

பால் உற்பத்திய அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் என்ற போர்வையில் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் நிர்வாகத்தின்கீழுள்ள தோட்டக் காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்படி நாவலப்பிட்டிய – கலபொட, வட்டவளை – மவுன்ஜின் தோட்டங்களில் இருக்கும் 800 இற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் தனியாருக்கு வழங்கப்படவுள்ளன. அத்துடன், தொல்தோட்டை, கிறோட்வெலி ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டக் காணிகளும் பறிபோகவுள்ளன.

இத்துடன் இந்த நடவடிக்கை நின்றுவிடப்போவதில்லை. நாகஸ்தன்ன தோட்டம், கந்தலோயா தோட்டம், இரத்தினபுரியில் சில தோட்டங்களிலும் காணி அபகரிப்பு இடம்பெறவே போகின்றது. இது தொடர்பான தகவல்களையும், எச்சரிக்கைகளையும் நாம் ஏற்கனவே விடுத்திருந்தோம். ஆனால் ஆளுங்கட்சியில் உள்ள மலையக பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்தனர். பிரச்சினையை திசை திருப்பினர்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளை எமது மக்களே வளமாக்கினர். 150 வருடங்களுக்கு மேலாக எம்மவர்கள் உழைப்பை வளங்கியுள்ளனர். தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் எமது மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை நல்லாட்சியின்போது நாம் முன்னெடுத்தோம். தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான திட்டத்தையும் வகுத்தோம். இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்திருக்கலாம். அதனைவிடுத்து எம்மவர்களை தொடர்ந்தும் நாட்கூலிகளாக வைத்திருப்பதற்கும், அடிமைகளாக நடத்துவதற்குமே முயற்சி எடுக்கப்படுகின்றது. மாட்டுப் பண்ணை, கோழிப்பண்ணை உள்ளிட்டவற்றில் எம்மவர்கள் வேலை செய்ய வேண்டும், அவர்கள் உரிமையாளர்களாக முடியாது என்பதே ஆளுந்தரப்பின் நோக்கம்.
காணி அபகரிப்புகளை தடுத்து, எமது மக்களுக்கு ஆளுங்கட்சியிலுள்ள பிரதிநிதிகள் தீர்வை பெற்றுத்தருவார்கள் என நம்பமுடியாது. எனவே, இம்முயற்சியை தோற்கடித்து, மலையக மக்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். இளைஞர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் உட்பட சமூகத்தை நேசிக்கும் அனைவருக்கும், சமூகத்தின் இருப்பைக்காக்க ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியாக, தமிழ் முற்போக்கு கூட்டணி இதற்கான தலைமைத்துவத்தை வழங்கும்.” -என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here