நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையின் கழிவறையில் இருந்து கைக்குண்டு மீட்பு.

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்திற்குரிய மூவர் மீது காவல்துறையினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், நாரஹேன்பிட்டி காவல்துறையும், கொழும்பு குற்றவியல் பிரிவும் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரிடமும், கட்டுமானப் பணிகளுக்காக வைத்தியசாலைக்கு சென்ற சிலரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வைத்தியசாலையின் சி.சி.ரி.வி காணொளி காட்சிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

நுளம்புச் சுருளின் உதவியுடன் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்த குறித்த கைக்குண்டு, வைத்தியசாலையின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து நேற்று (14) மீட்கப்பட்டது.

வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், குறித்த கைக்குண்டை அந்த இடத்திற்கு கொண்டு சென்றவர் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டு, காவல்துறை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.