ஷாரூக்கான் – அட்லி இணையும் ‘லயன்’?

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துவரும் படத்துக்கு ‘லயன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட்டது. இதில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்துக்கு முதலில் ‘ஜவான்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எதையும் உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள். தற்போது ஷாரூக்கான் – அட்லி படக்குழுவினர் மெட்ரோ ஸ்டேஷன் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டுள்ளனர். இதற்கான கடிதம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தக் கடிதத்தில் படத்தின் தலைப்பை ‘லயன்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை வைத்துப் பலரும் இதுதான் தலைப்பு என்று பகிர்ந்து வருகிறார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, “படப்பிடிப்புக்கு அனுமதி கேட்கும்போது, தலைப்பு என்று ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஆகையால் ‘லயன்’ என்று குறிப்பிட்டோம். அது வெறும் பணிபுரியும் தலைப்பே. படத்துக்கு இன்னும் தலைப்பு இறுதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்கள்.

இதன் மூலம் ஷாரூக்கான் – அட்லி படத்தின் தலைப்பு தொடர்பான வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.