பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு 70 ஆண்டுகளாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த இலங்கை, தற்போது சீன அரசாங்கத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் சீனாவின் ஒரு பகுதியாக இலங்கை மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
எமது நாடு மீள முடியாத கடன் சுமையில் சென்று கொண்டிருக்கின்றது. கடன் சுமை அதிகரிக்கும் போதெல்லாம் அதிலிருந்து மீள்வதற்கு நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதை இன்றைய அரசாங்கம் வழமையாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே, இவர்கள் ஆட்சியில் இருந்த போது, நமது நாட்டு தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு குறிப்பாக சீனாவுக்கு விற்பனை செய்தார்கள். அதில் துறைமுக நகரத்துக்காக இலங்கை துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பும் இராணுவத் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளும் முக்கியமானவை ஆகும்.
தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் ஏற்கனவே பல இடங்களை சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது போல, துறைமுகப் பகுதியில் மேலும் 13 ஏக்கர் காணியை வழங்குவதற்குத் தயாராக உள்ளது. பல கோடி ரூபா பெறுமதியான இடத்தை குறுகிய தேவை கருதி விற்பனை செய்ய முயற்சிப்பது கவலை அளிப்பதாக இருக்கின்றது. அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள கொழும்பு நகரத்தின் முக்கிய இடத்தையும், கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ள டெலிகொம் கட்டிட, விமானப்படைத் தளம் அமைந்துள்ள பிரதேசம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் அடங்கிய பகுதிகளையும் சீனாவுக்கு விற்பனை செய்வதற்குத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் முக்கிய பகுதிகளை இவ்வாறு சீனாவுக்கு விற்பனை செய்து வந்தால், இறுதியில் இலங்கை சீனாவின் ஒரு பிராந்தியமாக மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாக பலரும் சுட்டிகாட்டியுள்ளார்கள். “தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை தடுப்போம்” என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறி மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் அதற்கு மாறாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நல்லாட்சி அரசாங்கத்தால் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட சொத்துக்களை மீட்பதாகக் கூறிய இன்றைய அரசாங்கம் நாட்டின் முக்கிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்கள் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. அரசாங்கத்தின் கபடத் தனத்தையும், போலியான தேசப் பற்றையும் நாட்டு மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.