“தரிசு நிலங்கள் என கூறி தோட்ட காணிகள் வெளியாருக்கு வழங்குவதை நியாயப்படுத்தப் பார்ப்பதன் மூலம் இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது வெளிச்சமாகின்றது.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாத்தஹேவாஹெட்ட பிரதச சபை உறுப்பினர் பெரியசாமி கணேசன் தெரிவித்தார்.
இன்றைய அரசாங்கம் பெருந்தோட்ட காணிகளை கூறுபோட்டு வெளியாருக்கு கொடுக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறது. அத்தோட்டங்களில் வாழ்பவர்களுடன் எவ்வித கலந்துரையாடலும் செய்யப்படவில்லை. தோட்ட மக்களின் அபிப்பிராயங்கள் கேட்கப்படவில்லை. தான்தோன்றித்தனமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் எமது மக்களின் பிரதிநிதியாக அரசில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
அரசின் பங்காளிகள், இவை தரிசு நிலங்கள் என்று கூறி நியாயம் முன்வைக்கின்றனர். அப்படியாயின் அவர்களும் இத்திட்டத்திற்கு உடந்தையாக உள்ளனர். கலபொட மற்றும் மவுண்ட் ஜீன் தோட்டங்களில் எடுக்கப்படும் 811 ஏக்கர் காணி, தரிசு நிலமா? அத்தோட்டங்களின் பக்கமே எட்டிப்பார்க்காதவர்கள் இவ்வாறு குறிப்பிடுவதொன்றும் புதுமையானதல்ல. கிரேட் வெளி மற்றும் தெல்தோட்டை தோட்டங்களில் இருந்து எடுக்கப்படும் 350 ஏக்கர் காணி தரிசு நிலமா? இந்த காணி வியாபாரத்தின் பின்னணியில் இருப்பவர்களுக்கு அவ்வாறு தெரிவது ஆச்சிரியப்படுவதற்குரிய ஒன்றல்ல.
இவை அனைத்தும் தேயிலை செடிகள் இருக்கின்ற நிலங்கள், மீள பயிரிடக்கூடிய நிலங்கள், அவை அங்கு வாழுகின்ற தோட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்கள். ஆனால் இன்று அவை தனியார் கம்பனிகளுக்கு மொத்தமாக வழங்கப்படுகின்றது. அதன் மூலம் எமது மக்கள் இன்னும் 50 வருடங்களுக்கு அடிமை தொழிலாளிகளாக இருக்கவேண்டிய இன்னுமொரு காலகட்டம் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமன்றி இப்போதைய தோட்டங்களில் இருக்கின்ற சுதந்திரத்தை இழந்து மாட்டு பண்ணைகளுக்குள் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுகின்றது. இதை நியாயப்படுத்தி காட்டுபவர்கள் எல்லாம், எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
நாம் சொல்வது, “எமது மக்களை சிறு தோட்ட உடமையாளர்கள் ஆக்கப்போகின்றோம்” என்பதை உச்சரிப்பதற்கு கூட இவர்கள் யாருக்கும் அருகதை கிடையாது.