பாடும் நிலா எம்மை விட்டு பிரிந்து இன்றுடன் ஒருவருடம்.

பாடும் நிலா’ எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

”ஆயிரம் நிலவே வா..”, ”இயற்கை என்னும் இளைய கன்னி..” ஆகிய பாடல்களின் மூலம் தமிழ் திரை இசை உலகுக்கு பின்னணி பாடகராக அறிமுகமானவர் எஸ் பி பாலசுப்ரமணியம். திரை இசை உலக ரசிகர்களால் ‘பாடும் நிலா’ என்றும், ‘எஸ்பிபி’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் இவர், கடந்த ஆண்டு இதே தினத்தில் எம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு பிரிந்தார்.

பின்னணி பாடகராக தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்திருக்கிறார்.

பின்னணி பாடகர் என்ற அடையாளத்தை கடந்து அவர் பின்னணி பேசும் கலைஞர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் என பல அவதாரம் எடுத்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனமாய் இன்றும் வீற்றிருப்பவர்.

‘கேளடி கண்மணி’ படத்தில் ‘மண்ணில் இந்த காதல் இன்றி..’ என தொடங்கும் பாடலை மூச்சுவிடாமல் பாடி, இன்றைய இளம் கலைஞர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.

திரைப்பட பாடல்கள் பதிவாகும் பதிவரங்கத்தில் பாடல் வரிகளுக்கிடையே, இசையமைப்பாளரின் அனுமதியுடன் இவர் இடும் சங்கதிகள், ரசிகர்களின் ரசனையை துல்லியமாக அவதானித்த இசைக்கலைஞர் என்பதற்கு சான்று என்றேக் குறிப்பிடலாம்.

இதுபோன்று அவர் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டால் அது கடலளவு நீளும். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் எம் மண்ணை சேர்ந்த இசைக் கலைஞர்கள் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் பிரத்தியேக பாடல் ஒன்றினை உருவாக்கி, அதன் மூலம் இசையஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்றைய திகதியில் கொரோனாத் தொற்று பாதிப்பிலிருந்து விடுபட்டு, நாளாந்த வாழ்விலுக்காக எம்மை நாமே புதுப்பித்துக்கொள்ளும் போது இவருடைய பாடல்கள் தான் ஊக்கமளிப்பவையாக இருக்கிறது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மை.