அரச வளங்கள் விற்கும் போட்டி வைத்தால் இந்த அரசாங்கம் முதல் இடத்தினை பெற்றுவிடும்.

நாங்கள் இந்த நாட்டை பாதுகாப்போம் நாங்கள் தான் நாற்று பற்றாளர்கள் என்று சொல்லி வந்த அரசாங்கம் துறைமுக நகரத்தில் ஆரம்பித்து இன்று கெரவலபிட்டி வரை சென்றுள்ளது அது மாத்திரமன்றி கொழும்பில் உள்ள முக்கிய இடங்களை விற்பதற்கு எத்தனித்து வருகிறது ஆகவே அரச சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் இந்த அரசாங்கமே முதல் இடத்தினை பெரும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

விந்துலை என்போல்ட் சென் ரெகுலாஸ் தோட்டத்தில் தனது பிறந்த நாளினை முன்னிட்டு தனது சொந்த நிதியில் பாலர் பாடசாலையை புனர் நிர்மாணம் செய்து அதனை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

இன்று அரசாங்கம் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது ஆனால் ஆசிரியர்களின் சம்பளமுரண்பாடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. அவர்களின் கோரிக்கை நியாயமானது என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் அவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பித்தால் முழுமையான பலனை பெற்றுக்கொள்ளாத நிலையே உருவாகும்.

ஆசிரியர்கள் மனத்திருப்தியுடன் வேலைசெய்தால் தான் மாணவர்கள் நல்ல கல்வியினைப் பெறக்கூடிய சூழல் ஏற்படும் இதனை உணர்ந்து அரசாங்கம் உடனடியாக இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். அரசாங்கம் இன்று வரவு செலவு திட்டத்தில் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள ஆசிரியர்கள் தயாரில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது பெற்றுக்கொடுத்த எந்தஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதேநேரம் இன்று பெருந்தோட்டக் காணிகள் மிகவும் சூட்சுமமான முறையில் அபகரிக்கப்படுகின்றன. அவற்றினை மேலும் தனியாருக்கு பெற்றுக்கொடுப்பதற்கே அரசாங்கம் எத்தணித்து வருகின்றது. இன்று மிகவும் பாதிப்புக்குள்ளான துறையாக சுகாதாரத்துறையும் கல்வித்துறையுமே காணப்படுகின்றன. அவற்றுக்கு முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. நாட்டு மக்கள் விலையேற்றத்தால் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர் அவை எவற்றுக்கும் இந்த அரசாங்கம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவில்லை.

ஆகவே மிகவிரைவில் இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அணிதிரள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது தொழிலாளர் தேசிய சங்கத்தில் தொழிற்சங்க அலுவலகங்களில் வேலைசெய்து கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 40 காரியாலய முழுநேர உத்தியோகத்தர்களுக்கு அரிசி, மா, கிழங்கு, வெங்காயம் உட்பட அத்தியாவசிய பொருட்களும் அவர்களுக்கு வழங்கிவைக்கப்ட்டன.

இந்நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை, நுவரெலியா , அக்கரபத்தனை பிரேதேசசபையின் உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கே.சுந்தரலிங்கம்.