உட்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபா நிதியொதுக்கீடு பூர்த்தி. விரைவில் மக்களுக்கு கையளிக்கப்படும்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நிர்மாணிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வீட்டுத்திட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பலகோடி ரூபா நிதியொதுக்கீட்டில் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதோடு விரைவில் மக்கள் பாவனைக்கு முழுமையான வீடுகள் கையளிக்கப்படுமென இ.தொ.கவின் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது பல வீட்டு திட்டங்கள் கட்டப்பட்டு அவை முழுமைபடுத்தபடாமல் கைவிடப்பட்டதால் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி மக்கள் செல்வதற்கு அஞ்சினர்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கவனத்தில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பல கோடி ரூபா நிதியொதுக்கப்பட்டு வீடுகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்தவரிசையில் டொரிங்டன் எம் ச் பிரிவு,டொரிங்கன் தோட்டம்,டொரிங்டன் கல்மதுரை பிரிவு,அக்கரப்பத்தனை வெவர்லி பிரிவு,அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டம் ஆகிய தோட்டங்களில் மின்சாரம்,பாதை,குடிநீர் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தியாக்கப்பட்டு விரைவில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.

மேலும் இக்கொரோனா சூழ்நிலையிலும் மக்களின் தேவை கருதி பல கோடிரூபா நிதியொதுக்கி வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் காலங்களில் எவ்வித பிரச்சனையுமற்ற முழுமையான வீடுகளை கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

 

நீலமேகம் பிரசாந்த்