எரிவாயுவின் விலை குறைக்க நடவடிக்கை

லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்களை ஒன்றிணைத்து புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டு தற்போதுள்ளதை விட எரிவாயுவின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு நிறுவனங்களால் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவது வழமையாக இடம்பெறும் செயற்பாடாகும். இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய லாப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனங்களை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் தலையீட்டுன் ஒன்றிணைந்த கொள்வனவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் தற்போதுள்ளதை விட சுமார் 100 – 125 ரூபா விலையை குறைக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனம் அதன் செய்பாடுகளை ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ளார்.