ஹட்டன் கொழும்பு பழைய வீதியினை ஊடறுத்துச் செல்லும் மகாவலி ஆற்றிக்கு நீர் வழங்கும் பிரதான ஓடைகளில் ஒன்றான ரொத்தஸ் ஓடையில் கழிவுகளை கொட்டுவதனால் மகாவலி ஆற்றின் நீர் அசுத்தமடைவதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நகர் பகுதியில் சேரும் மாமிச கழிவுகள், மரக்கறிகரி கழிவுகள், கட்டட கழிவுகள், பிலாஸ்ரிக், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை மக்கள் ஈவு இரக்கமின்றி குறித்த ஓடைப்பகுதிக்கு வாகனங்களில் கொண்டு சென்று கொட்டுக்கின்றன.
இதனால் மகாவலி ஆற்று நீரை குடிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும், விவசாயத்திற்காகவும் இந்த நீரினை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாகுவதற்கு இடமிருப்பதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் காரணமாக வன ஜீவராசிகள் மற்றும் நீர் உயிரினங்கள் ஆகியனவும் அழிந்து போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதுடன் நீர் ஊற்றுக்களும் அழிந்து போகும் நிலை காணப்படுகின்றன. குறித்த வீதி சனநடமாற்றம் குறைந்த பகுதியாக காணப்படுவதனால் நாளாந்தம் பலர் வந்து பல்வேறு விதமான குப்பைகளை கொட்டிச் செல்வதாகவும் இதனால் தற்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் கொழும்பு பழைய வீதியில் பல இடங்களில் கோழி மற்றும் மீன் கழிவுகள் கொட்டுவதனால் இந்த கழிவுகளை சாப்பிடுவதற்கு சிறுத்த பன்றி முதலான மிருகங்களும் வருவதாகவும் இதனால் இந்த வீதியில் பயனிப்பவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படாலாம் எனவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அம்பகமுவ பிரதேச சபையினால் பெயர்ப்பலகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த பலகைக்கருகிலேயே குப்பைகள் கொட்டுவது மக்களின் ஊதாசின தன்மையினை காட்டுவதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதனை உடன் நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்.