நல்லாட்சி அரசாங்கத்தையோ முன்னாள் அமைச்சரையோ விமர்சிப்பது ஜீவன் தொண்டமானின் நோக்கம் அல்ல!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தையோ மலையக வீடமைப்புக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சரையோ விமர்சிப்பது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நோக்கம் கிடையாது. அமரர் ஆறுமுகன் தொண்டமானால் கொண்டு வரப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக பயனாளிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் ஆகும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் இன சபையின் மாதாந்த அமர்வில்(12/10/2021) தலைமை வகித்துப் பேசும் போது தெரிவித்தார்.குறித்த சபை அமர்வில் சபை தலைவர் உட்பட 16 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தார்கள்.

இதன்போது அவர் பேசுகையில்

கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குள் 90% கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நடக்க முடியாதாவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஏனையோருக்கும் விரைவில் வழங்கப்பட்டு விடும். பாடசாலைகள் விரைவில் ஆரம்பமாகும் போது மாணவர்களுக்கு உதவும் வகையில் புலமைப் பரிசில், சாதாரண தரம், உயர்தரம் ஆகியவற்றுக்கு முன்னோடிப் பரீட்சைகளை இலவசமாக நடத்துவதற்கும், நடமாடும் வாசிகசாலைகளை அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எமது பிரதேச சபைக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் விளையாட்டுப் பயிற்சிகளைப் பெறுவதற்காக கொட்டகலை விளையாட்டு மைதானம் பல இலட்ச ரூபா செலவில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் புனரமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக மின்வெளிச்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் இளைஞர்கள் மைதானத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்த மாதம் எமது சபையின் 2022 க்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. உறுப்பினர்களின் புதிய யோசனைகளும் வரவேற்கப்படுகின்றது. உறுப்பினர்களுக்கு 2022 இல் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி 2 இலட்ச ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிதேச சபை உறுப்பினர்களுக்கு கட்சி பேதம் இல்லாமல் தலா 4 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கித் தந்துள்ள பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் சபையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

இந்திய வீடமைப்புத் திட்டம் 2012 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் சோனியா காந்தி அம்மையார் ஊடாக ஆறுமுகன் தொண்டமானால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஆட்சி மாற்றம் காரணமாக பல வீடுகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளன. அவற்றுக்கு மின்சாரம், குடிநீர், பாதை அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து புனரமைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 526 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அதேநேரம், நல்லாட்சி அரசாங்கத்தையோ, மலையக வீடமைப்புக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சரையோ யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். அமரர் ஆறுமுகன் தொண்டமானால் உருவாக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் உரிய முறையில் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே ஜீவன் தொண்டமானின் நோக்கமாகும் என்றார்.

நீலமேகம் பிரசாந்த்