தெற்கு தாய்வானின் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழப்பு

தெற்கு தாய்வானின் காவோசியுங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் 40 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடத் தொகுதி சேதமடைந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நான்கு மணி நேரத்திற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், தீயில் சிக்குண்டு 46 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 79 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை, எனினும் தீ விபத்துக்கு முன்பு வெடிப்புச் சத்தம் கேட்டதாக அருகில் இருந்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.