வங்கதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து.

டி20 உலகக் கோப்பை முதல் சுற்று, இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஸ்காட்லாந்து இன்னிங்ஸ்

முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் ஓபனர் காய்ட்ஜர் 0 (7), ஒன்டவுன் பேட்ஸ்மேன் க்ராஸ் 11 (17) போன்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்கள். இருப்பினும் மறுமுனையில் மற்றொரு ஓபனர் முன்ஷி 29 (23) ரன்கள் சேர்த்து நம்பிக்கையளித்தார்.

அடுத்துக் களமிறங்கிய மெக்லியாட் 5 (14), லியஸ்க் 0 (2) போன்றவர்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால், ஸ்காட்லாந்து 100 ரன்களைகூட எட்டாது எனக் கருதப்பட்டது. இந்நிலையில் 7,8ஆவது இடத்தில் களமிறங்கிய கிறிஸ் க்ரியேவ்ஸ், மார்க் வாட் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து, ரன்களை குவித்து வந்தார்கள். இதனால், ஸ்கோர் திடீர் ஏற்றம் கண்டது. இறுதியில் க்ரியேவ்ஸ் 45 (28), வாட் 22 (17) ஆகியோர் ஆட்டமிழந்ததால், ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 140/9 ரன்கள் சேர்த்தது.

வங்கதேச அணி இன்னிங்ஸ்

இது எளிய இலக்கு என்பதால் வங்கதேச அணி அபார வெற்றிபெறும் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், ஓபனர்கள் லிடன் தாஸ், சௌம்யா சர்க்கார் ஆகியோர் தலா 5 ரன்கள் சேர்த்து நடையைக் கட்டி ஷாக் கொடுத்தனர். தொடர்ந்து ஷகிப் அல் ஷசன் 20 (28), முஷ்தபிசுர் ரஹீம் 38 (36), முகமதுல்லா 23 (22) போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஸ்காட் பௌலர்கள் மிடில் ஓவர்களில் ஒரு சில பவுண்டரியை மட்டும் விட்டுக்கொடுத்ததால்தான், நெருக்கடியுடன் விளையாடி வங்கதேச வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தார்கள். இறுதியில் 20 பந்துகளுக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரை வீசிய மார்க் வாட் அபிஃப் ஹோசைன் 18 (12) விக்கெட்டை எடுத்து, 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.

தொடர்ந்து 19ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், கடைசி ஓவருக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. மெகிரி ஹாசன் ஒரு சிக்ஸர், பவுண்டரி மட்டுமே விளாசினார். அடுத்து, சைஃபூதின் ஒரு பவுண்டரி அடித்தார். அவ்வளவுதான் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 134/7 ரன்கள் சேர்த்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஸ்காட்லாந்து பௌலர் ப்ராட்லி வீல் 3/24 விக்கெட்களை கைப்பற்றி, ஸ்காட்லாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

https://fb.watch/8IKcc88kod/