ராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை முதல் வெற்றி.

ராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் அபுதாபியில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைப் போட்டிக்கான ஏ பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நமிபியா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி.

முதலில் பேட் செய்த நமிபியா அணி 19.3 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 97 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் இலங்கை அணி தகுதிச்சுற்றில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. நமிபியா பேட்டிங் வரிசையை குலைத்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தீக்சனாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தீக்சனா 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணிக்கு வெற்றி கிடைத்தாலும் நமிபியா போன்ற கத்துக் குட்டி அணியிடம் கூட போராடித்தான் வெற்றியைப் பெற்றுள்ளது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிசாங்கா(5), பெரேரா(11), சந்திமால்(5) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்ததால், 3 விக்கெட் இழப்புக்கு 26ரன்கள் என்று இலங்கை அணி திணறியது. பவர்ப்ளேயில் இலங்கை அணி 3 விக்கெட்இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

பி பிரிவு சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அதிர்ச்சி அளித்த நிலையில் நேற்றை ஆட்டத்தின் போக்கு இலங்கை அணி தோற்றுவிடுமா என்ற கேள்வியை எழுப்பியது. ஆட்டம் போனபோக்கைப் பார்த்தால், நமிபியாவிடம் கூட 2014ம் ஆண்டு டி20 சாம்பியனான இலங்கை அணி தோற்றுவிடுமா என்று எண்ணப்பட்டது.

ஆனால், 4-வது விக்கெட்டுக்கு ராஜபக்ச, அவிஷ்கா இருவரும் சேர்ந்து நம்பிக்கை அளித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.4-வதுவிக்கெட்டுக்கு இருவரும் 8.2 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தனர். ராஜபக்ச 42 ரன்களிலும், அவிஷ்கா 30 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியைவெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 13.3 ஓவர்களில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இலங்கையின் ராஜபக்ச, அவிஷ்கா இருவரையும் பிரிக்க நமியா கேப்டன் எராஸ்மஸ் 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பிரிக்க முடியவில்லை. அந்த அணியில் விக்கெட் கீப்பர் தவிர இருவர் மட்டுமே பந்துவீசவில்லை மற்ற 8 வீரர்களும் பந்துவீசினர்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை 2014்ம் ஆண்டு டி20 சாம்பியன் பட்டம் வென்ற 96 ரன்களை சேஸிங் செய்யஇப்படியா திணறுவது என்ற கேள்விதான் எழுந்தது.96 ரன்களை சேஸிங் செய்வதற்கு 3 விக்கெட்டுகளையும் இழந்து, ஒரு கட்டத்தில் சரிவை நோக்கிச் சென்றது.

பந்துவீச்சை மட்டுமே மிகப்பெரிய பலமாகக் கருதி இலங்கை அணி களமிறங்குகிறது. தொடக்கம் சரியாக இருந்தால், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்புவது, தொடககம் மோசமாக இருந்தால், நடுவரிசை நிலைத்து ஆடுவது என்பதுதான் நீண்டகாலமாக இலங்கை அணியின் அடையாளமாக இருக்கிறது. பேட்டிங்கில் நிலைத்தன்மையுடன் இல்லை என்பது தெளிவாகிறது.

அதிலும் ஐக்கிய அரபு அமீரகத்தி்ல் உள்ள 3 மைதானங்களும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற களம் என்பதை இலங்கை வீரர்கள் பயன்படுத்தினர். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு வருவதற்கு முன், சர்வதேச அணியுடன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடிய அனுபவம் மட்டுமே நமியாவுக்கு இருந்தது தெளிவாகத் தெரி்ந்தது.

தீக்சனா, லஹிரு குமாரா, ஹசரங்கா ஆகிய மூவரின் சுழற்பந்துவீச்சில் நமிபியா பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் திணறினர். குமாரா 3.3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இலங்கை பந்துவீச்சாளர்கள் தாங்கள் வீசிய 4 ஓவர்களில் குறைந்தபட்சம் இரு ஓவர்களை டாட்பந்துகளாகவே வீசினர்.

சர்வதேச அளவில் சுழற்பந்துவீச்சை ஆடி பழகாத நமியா பேட்ஸ்மேன்கள், லெஸ் ஸ்பின்னையும், ஆஃப் ஸ்பின்னையும், கூக்ளியைும் கணிக்க முடியாமல் திணறி ஆட்டமிழந்தனர். 68 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நமிபியா அணி அடுத்த 28 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.

நமிபியா அணியில் கேப்டன் எராஸ்மஸ்(20), கிரேக் வில்லியம்ஸ்(29) இருவரைத் தவிர அணியில் எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை.

https://fb.watch/8K37fiQ3hs/