ஊடக துறையின் பணி காரணமாக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் குடாஓயா விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நீர்வழங்கல் வடிக்கால் அமைச்சின் இணைப்பாளரும் செயலாளருமான எஸ் ஜோதிவேல் அவர்களின் தலைமையில் இன்று 19 ம் திகதி நடைபெற்றது.
விநாயகபுர மக்கள் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சனைக்கு முகம் கொடுத்து வந்தனர். இது குறித்த பல அரசியல் தலைவர்களிடம் முறையீடு செய்த போதிலும் அவர்களின் பிரச்சினைகள் தீரவில்லை இந்நிலையில் குறித்த குடிநீர் பிரச்சினை தொடர்பாகவும் அம்மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக ஊடகங்கள் ஊடாக எடுத்துக்காட்டப்பட்டன அதனை தொடர்ந்து குறித்த நீர் வழங்கல் வடிக்கால் அமைச்சின் செயலாளர் சிதம்பரம் ஜோதிவேல் குறித்த பிரச்சினை தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து குறித்த மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் சௌபாக்கியா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கமைய நீர் வழங்கல் வடிக்கால் அமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து நீர் வழங்கல் வடிக்கால் அமைப்பின் செயலாளர் எஸ். ஜோதிவேல் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்….
நான் அமைச்சில் இருக்கும் போது விநாயகபுர மக்கள் குடிநீர் இல்லாத அவல நிலை தொடர்பாக பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தியினை என்னிடம் ஒருவர் காட்டினார. அந்த செய்தியினை எழுதியிருந்தவர் திரு கே.சுந்தரலிங்கம் அதனை அவர் மிக உருக்கமாக எழுதியிருந்ததனால் உடனே குறித்த நிறுவனத்திடம் தொலைபேசியில் பேசி அவரின் தொலைபேசி எண்ணை பெற்று அவருடன் தொடர்புகொண்டு குறித்த இடத்திற்கு வருகை தந்தேன் அப்போது அங்கு வாழும் வயோதிபர்கள் மிகவும் துன்பப்பட்டு குடிநீர் தூக்கிச்செல்வதனை பார்த்தேன் அங்கு இருந்த அம்மா ஒருவர் கண்ணீர் மல்க அவர்கள் படும் கஸ்ட்டத்தினை தெரிவித்தார்.
அன்று நான் இவர்களுக்கு அமைச்சர் வாசுதேவ அவர்களின் வழிகாட்டலில் எப்படியாவது குடிநீரினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து செயல்பட்டேன் இதனை நடைமுறைபடுத்துவதற்கு பல தடைகள் இருந்தன. அவற்றினை ஒவ்வொன்றாக சரிப்படுத்தி இந்த குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது குறித்த குடிநீர் திட்டம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது அதில் முதல் கட்டமாக கிணற்றிலிருந்து நீர் பம்புவதற்கு உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் அதனை தொடர்ந்து 40 ஆயிரம் லீற்றர் நீர் தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும் இதில் 80 சதவீதமான வேலைத்திட்டங்களை அரசாங்கம் செய்து கொடுக்கும் மீதமாக உள்ள இருபது சதவீத வேலைத்திட்டங்கள் பொது மக்கள் செய்து கொடுக்க வேண்டும் என அவர் இதன் போது கேட்டுக்கொண்டதுடன் இந்த திட்டத்தினை அமுல்படுத்தியமையினை இட்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
குறித்த திட்டத்திற்காக அரசாங்கம் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபா நிதியினை செலவு செய்ய எதிர்ப்பார்த்திருப்பதாகவும் இதன் மூலம் 400 குடும்பங்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும்
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்….
நாங்கள் பல வருட காலமாக குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்தோம், குடிநீர் பிரச்சினை காரணமாக இங்கு காணிகளை வாங்கியவர்கள் வீடுகளை கட்டவில்லை இதனால் இங்குள்ள பலர் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம். அதனை தீர்த்து தருமாறு பல அமைச்சர்களிடமும் மலையக தலைவர்களிடமும் தெரிவித்து வந்தோம் ஆனால் எவரும் அதனை தீர்த்து வைக்க முன்வரவில்லை இந்நிலையில் எமது பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியதனை தொடர்ந்து இன்று இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது இதனால் நாங்கள் ஊடகங்களுக்கும் குறிப்பாக இந்த பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக வெளிப்படுத்திய வசந்தம் தொலைக்காட்சிக்கும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என இவர்கள் தெரிவித்தனர்.
கே.சுந்தரலிங்கம்.