ஆசிரியர்களின் சம்பள உயர்விற்கும்,மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் என்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழு மூச்சாக முன்னிற்கும் என தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இன்றைய தினம் பதுளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவிருந்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அனைத்து வளங்களையும் கொண்ட அழகிய நாடாக இருந்த இலங்கை வரலாறு காணாத அளவிற்கு தற்போது அத்தனையையும் இழந்து வறுமை, பணவீழ்ச்சி, நோய்தொற்று என அனைத்திற்கும் முகங்கொடுத்துள்ளது. இந்நிலை தொடருமானால் எமது உறவுகள் தேயிலை இலைகளையும் வயல்களிலுள்ள புல்லுகளை மாத்திரமே உண்ண முடியும்.
அதற்கும் கேடு விளைவிக்கும் நோக்கில் இவ் அரசாங்கம் உரம் தருவதாக கூறி சீனாவிலிருந்து சீனக் குப்பைக் கழிவுகளையும், இந்தியாவிலிருந்து பொற்றாசியம் தருவதாக கூறி அங்குள்ள கழிவுகளையும் கொணர்ந்து இங்குள்ள விவசாய மக்களின் உயிர்களை காவுகொள்ள தயாராகின்றது இவ் அரசாங்கம். இதற்கும் நம்மவர் சிலர் வக்காலத்து வாங்குவதே வேதனைக்குறியதாகும்.
மலையக மக்கள்களின் இன்னல்களையும் கண்ணீரையும் காரணங் காட்டி தங்களது அரசியல் சுயலாபங்களை தீர்த்துக் கொள்கின்றனரே தவிர மக்களின் பார்வையில் நின்று ஒரு போதும் அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை.
அரசாங்கம் அவர்களது குடும்பம்,ஆட்சி என்பவற்றை மட்டும் நோக்காக கொண்டு மக்களை படுகுழியில் வீழ்த்த எத்தனிக்கின்றது. மாறாக மக்களின் பிரச்சினை என்ன? என்பதில் அசமந்த போக்காகவே உள்ளனர்.மக்கள் பட்டினியில் ஒரு புறம் வாட மறுபுறம் மாணவர்களின் கல்வி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆகவே மக்களையும் மீட்டு நம் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு மக்கள் பிரதிநிதிகளான எமக்கு உண்டு என்பதன் தார்ப்பரியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிப் பிரதிநிதி என்பதையும் தாண்டி தொப்புள் கொடி உறவுகளின் காவலன் என்ற வகையிலும் என்னுடைய மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடவும் தயாராகவுள்ளேன், எனவும் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்தார்.