‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குள் மலையகத் தமிழர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்றால் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்ற கேள்வியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச்செயலாளருமான செந்தில் தொண்டமான் முன்வைத்தார்.
எனவே, இந்தச் செயலணியில் தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் ஆணித்தனமாக வலியுறுத்தினார்.
இதனை ஆராய்ந்து தமிழர்களை உள்ளடக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதன்போது உறுதியளித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழர்களை உள்வாங்கி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இம்மூவரில் ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன் என்பவர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் கோரிக்கயை நிறைவேற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.