இனியும் எம்மை சீண்டினால் நடப்பதே வேரென அரசாங்கத்தை எச்சரித்தது சுதந்திர கட்சி

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் நீண்டகாலமாக புகைந்துகொண்டிருந்த முரண்பாடுகள் நேற்று சபையில் பாரிய சர்ச்சையாக வெடித்தது. தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சீண்டிக்கொண்டிருந்தாள் அரசாங்கத்திற்கு நடப்பதே வேறு என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர அரசாங்கத்தை நேரடியாக எச்சரித்தனர். சுதந்திரகட்சியின் எச்சரிக்கையினால் சபையில் திக்குமுக்காடிய பொதுஜன முன்னணியினர் வாதிட முடியாது வாய்மூடி நின்றனர்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில், ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான அரசாங்கத்தின் விமர்சனக் கருத்து குறித்து கூற்றொன்றை முன்வைக்க முயன்றார்.

இதன்போது அவர் கூறுகையில் முன்னாள் ஜனாதிபதியும் எமது கட்சியின் தலைவர் குறித்து ஏற்கனவே மோசமான கருத்துக்களை மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்தார். அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீண்டும் நேற்று அதனை கூறியிருந்தார். 3.7 பில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி தனக்கு ஒதுக்கியிருந்தார் என நேற்றும் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதில் தெரிவிக்க வேண்டும் என சபையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும் இதற்கு அனுமதி வழங்காத சபாநாயகர், ஏற்கனவே இது குறித்து பதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவின் உரையை நிறுத்தினார். எனினும் இதற்கு இணங்காத இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர சபையில் முரண்பட்டார்.

தன்னை நியாயப்படுத்திய மைத்திரி

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னரான விவகாரத்தை கூறவே தயாசிறி ஜெயசேகர முயற்சித்தார். நீங்கள் கூறியதை போன்று கமத்தொழில் அமைச்சர் இந்த சபையில் முன்வைத்த காரணிகள் தொடர்பில் நான் பதில் தெரிவித்தேன், எனது பதிலின் பின்னரும் ஜனாதிபதிக்கான செலவீன தலைப்புக்கள் நிதி ஒதுக்கீட்டில் எனது காலத்தில் 200 வாகனங்களை பாவித்ததாகவும், அதேபோல் வருடாந்த செலவாக 3.5 பில்லியன் ஒதுக்கப்பட்டதாக கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் முற்றுமுழுதாக பொய்யான காரணிகளாகும்.

அதேபோல் தற்போதைய ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டையும் எனது ஆட்சிக்காலக நிதி ஒதுக்கீட்டையும் ஒப்பிட்டு நான் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறினார். எனது காலத்தில் பாரிய 7 வேலைத்திட்டங்கள் எனது அமைச்சின் கீழ் இயங்கியது, அவை அதுவுமே இன்று இயங்கவில்லை. நானும் ஆளுந்தரப்பு உறுப்பினர், எனக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் தொடர்ச்சியாக இவ்வாறு பொய்யான பிரசாரம் செய்யக்கூடாது. நானும் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள், ஆகவே இதனை இனியும் நீட்டிக்க இடமளிக்க வேண்டாம் என சபை முதல்வரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

தயாசிறியின் உரையை நிறுத்த முற்பட்ட சபாநாயகர்

இதன்போது இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய போதும் சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை. அதனால் குழப்பமடைந்த தயாசிறி, மீண்டும் மீண்டும் தனக்கான சிறப்புரிமையை கோரினார்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டாம் – சபாநாயகர்

இதன்போது பிரதான எதிர்க்கட்சியினரும் தயாசிறி ஜெயசேகரவிற்காக குரல் எழுப்பினர், தயவுசெய்து அவருக்கு ஒலிவாங்கியை வழங்குங்கள் என்றனர். இதனால் சினமடைந்த சபாநயாகர், “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டாம்” என எதிர்கட்சியினரை பார்த்து கையை நீட்டி எச்சரித்தார்.

மைத்திரியின் வேலைத்திட்டத்தில் ஒன்றேனும் இன்று ஜனாதிபதி முன்னெடுத்தார?

தயாசிறி ஜெயசேகரவின் தொடர்ச்சியான நச்சரிப்பை அடுத்து, ஐந்து நிமிடங்கள் மட்டுமே வழங்குவேன் எனக்கூறி தயாசிறி ஜெயசேகரவிற்கு ஒலிவாங்கியை வழங்கினார். இதன்போது கருத்து தெரிவித்த தயாசிறி ஜெயசேகர ,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் அவரது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டது, ஜனாதிபதியின் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இவை செலவழிக்கப்பட்டன, அதுமட்டுமல்ல அவர் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அவதானித்தால், உணவு, மருத்துவத்துறை, விவசாயம்,நீர்ப்பாசம்,சூழல் பாதுகாப்பு என்ற அவசியமான துறைகளுக்கு கடன்களையும் பெற்றுக்கொள்ளாது நிதி உதவிகளை கொண்டு இந்த வேலைத்திட்டங்களை கையாண்டார். அதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைகுழுவிற்கும் இந்த நிதியில் தான் ஒதுக்கப்பட்டது. இதில் ஏதேனும் ஒன்றையேனும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதா என அவதானிக்க வேண்டும்.

அதிகார மோகத்தில் ஒரு சிலர்

அதுமட்டுமல்ல, 1978 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் அரசியல் அமைப்பு 20 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மாற்றம் செய்த ஒவ்வொரு ஜனாதிபதியும் தமது அதிகாரத்தை தக்கவைக்க அல்லது மூன்றாம், நான்காம் தடவைகள் தமக்கான அதிகாரத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் 2015 ஆம் ஆண்டில் நாம் கூட விரும்பாத நிலையிலும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும், பிரதமருக்கும் கொடுத்தார். இன்றைய ஜனாதிபதி என்ன செய்கின்றார் என்பதை தெரிந்துகொண்டு பேசவர வேண்டும். நான் ஒன்றை கூறிக்கொள்கின்றேன் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஒருதடவை அல்ல, இரண்டு அல்லது மூன்று தடவைகள் இதே குற்றச்சாட்டை முன்வைத்து அமைச்சர் மஹிந்தானந்த இனியாவது நிறுத்திக்கொண்டால் நல்லது.

இனியும் சீண்டினால் நல்லதல்ல – தயாசிறி அரசங்கத்திற்கு எச்சரிக்கை

இப்போது வரையில் நாம் பொறுத்துக்கொண்டுள்ளோம், ஆனால் இந்த பாராளுமன்றத்தில் 14 உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சியின் தலைவரை, முன்னாள் ஜனாதிபதிக்கு சேறு பூசும் செயற்பாடு இனியும் தொடர்ந்தாள் எம்மால் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. மஹிந்தானந்த இப்போது குழு வெட்டுகின்றார், முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகளை தாண்டி அதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதியின் குப்பைகளும் வெளிவரும்,அதன் விளைவு என்னவென வெளிப்படும். அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் என்ற ரீதியில் அரசாங்கத்தை பாதுகாக்க நாம் ஆரம்பத்தில் இறந்து இன்றுவரை செயற்பட்டுள்ளோம். ஒரு சில காரணிகளில் ஏனையவர்களை போன்று நாமும் குரல் எழுப்பியுள்ளோம்.மோத வேண்டுமென்றால் மோதுவோம், ஆனால் கட்சி தலைவரை விமர்சித்தால் இறுதியாக பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டும் என எச்சரிக்கின்றேன் என ஆவேசமாக கருத்துக்களை பதிவிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் ஏற்படவில்லை – சபை முதல்வர் தினேஷ்

இதன்போது நிலைமைகளை சமாளிக்க முயற்சித்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கருத்து கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாரதூரமான கருத்தை முன்வைத்தால் அதற்கு பதில் தெரிவிக்க முன்னர் உரிய உறுப்பினருக்கு அறிவித்தால் நல்லது. அப்போது குறித்த உறுப்பினர் தவறிழைத்திருந்தால் அதனை திருத்திக்கொள்ளவோ அல்லது அவரது காரணிகளை முன்வைக்கவோ ஏதுவாக அமையும். மைத்திரிபால சிறிசேன அவர்களின் பெயர் எந்த இடத்திலும் முன்வைக்கப்பட்டதாக நான் அறியவில்லை, ஜனாதிபதி செலவீனத்தலைப்புக்கள் குறித்த விவாத்தில் முன்னரை விட தற்போது ஜனாதிபதியின் எடுத்துக்காட்டு குறித்தே பேசப்பட்டது. இது நியாயமான காரணிகளாகும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் ஏற்படவில்லை. அவ்வாறான எண்ணப்பாட்டை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதையே நான் கூற முற்படுகின்றேன் என்றார்.

மீண்டும் சர்ச்சையை ஆரம்பித்த அமைச்சர் அளுத்கமகே

இதன்போது சபாநாயகர், சர்ச்சையை நிறைவுக்கு கொண்டிருந்து வரவு -செலவு திட்ட குழுநிலை விவாதத்திற்கு சென்ற நேற்றைய விவாதத்தை ஆரம்பித்து வைத்த வேளையில் எதிர்கட்சியின் முதல் உரையை பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர் ஆரம்பித்தார், அவரது உரை முடிவுக்கு வந்த நேரத்தில் அவசரமாக சபைக்குள் வந்த அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மீண்டும் சர்ச்சையை உருவாக்கினார். இதன்போது அவர் கூறுகையில் :- நான் சபையில் இல்லாத நேரத்தில் என்னை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தது மட்டுமல்லாது, குழிகளை தோண்ட ஆரம்பித்தால் நாற்றம் வீசும் என தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார். அதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன், ஏனென்றால் அர்ஜுன் அலோசியர் வழங்கிய காசோலைகளும் வெளிவரும். நான் யாருடைய தனிப்பட்ட காரணிகளையும் விமர்சிக்கவில்லை. இரண்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் ஒரு ஒப்பீட்டையே முன்வைத்தேன்.

எம்முடன் இருந்தாலும் ஒன்று இல்லையென்றாலும் ஒன்று- சு.கவிடம் அமைச்சர் அளுத்கமகே தெரிவிப்பு

ஜனாதிபதியின் எடுத்துக்காட்டான செயற்பாட்டை சுட்டிக்காட்ட எமக்கு அதிகாரம் உள்ளது. இந்த செலவீன அறிக்கையை சபைப்படுத்துகின்றேன். அதேபோல் முன்னாள் ஜனாதிபதியின் மூன்று வீடுகள் குறித்த தகவல்களையும் சபைப்படுத்துகின்றேன். இது யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்க நினைக்கவில்லை. ஆனால் எம்மை தாக்கினால் நாமும் தாக்குவோம். நாம் முதுகெலும்பு இல்லாத நபர்கள் அல்ல. ஆனால் உண்மைகளை வெளிப்படுத்தாது அமைதியாக உள்ளோம். இவர்கள் எம்முடன் இருந்தாலும் ஒன்று இல்லையென்றாலும் ஒன்றுதான். ஆகவே நாம் சண்டைக்குபோக விரும்பவில்லை. நான் பேச ஆரம்பித்தால் எனது வாயில் இருந்து வேறு என்ன விடயங்கள் வெளிவரும் என தெரியவில்லை. அரசாங்கமாக நாம் செயற்படுவதென்றால் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும், ஆகவே நான் இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன் என்றார்.

கண்ணாடி வீடுகளில் இருந்துகொண்டு கல்வீச தயாரில்லை – மைத்திரி பதிலடி

இதன்போது சபை அனுமதியை பெற்று கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன : கண்ணாடி வீடுகளில் இருந்துகொண்டு கல் வீச நான் தயாரில்லை. எனக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு நான் எடுத்துக்காட்டாக இருந்தேன், அவர்கள் செலவுசெய்த விதம், பயணித்த விதம் என்பவற்றில் இருந்து நான் விலகி அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தேன். விமானங்கள், ஹெலிகாப்டர் என்பன பாவித்த விதம் என்பவற்றை நிறுத்தி நான் 2015 ஆம் ஆண்டில் இருந்து எடுத்துக்காட்டாக இருந்தேன். ஆகவே மோதிக்கொள்ள சென்றால் எவ்வாறு காயம் ஏற்படும் என தெரியாது. 1947 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் அரசாங்கம் தாம் அதிகாரத்திற்கு வர ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இடைநடுவே அந்த ஒத்துழைப்பு முறிந்து, அதன் விளைவுகள் கண்முன்னே உள்ளது. பண்டாரநாயக அரசாங்கம், ஜே.ஆர் அரசாங்கம், சந்திரிகா அரசாங்கம், 2014 ஆம் ஆண்டு என்னால் ராஜபக் ஷ அரசாங்கம் தோற்றது. ஆகவே மூன்றில் இரண்டை தக்கவைக்கவும் அரசாங்கத்தை நடத்துவது குறித்தும் இதனை விட புத்திசாலித்தனமாக, ஆழமாக சிந்திக்க வேண்டும்.

அரசாங்கத்தின் பெரும்பான்மை எமது கைகளில்

இந்த அரசாங்கதின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கையில் தான் உள்ளது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள். நாம் அரசாங்கத்திற்குள் மோதிக்கொண்டால் அதன் விளைவு என்னவாகும் என்பதை இதற்கு 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே அரசாங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த அரசாங்கமும் கூட்டணி அரசாங்கம், பிரதான கட்சியுடன் 12 பங்காளிக்கட்சிகள் இணைந்துள்ளனர். எம்மாலும் வேகமாக பேச முடியும். ஆனால் எமக்கு அரசியல் அறிவு அனுபவம் உள்ளது. அரசாங்கத்தில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். குத்துச்சண்டை வீரர்கள் நாமல்ல, நட்புறவை வைத்துக்கொள்ளுவோம், நாமும் மோதிக்கொள்ளும் வேளையில் ஒரு தகுதியான பொருந்தக்கூடிய விதத்தில் பேச வேண்டும்.

அரசாங்கம் பாரிய அவப்பெயரை சந்திக்க மஹிந்தானந்தவே காரணம்

அதுமட்டுமல்ல, எனது பெயர் கூறாது நான் விவசாய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ததாக கூறினீர்கள், யார் இவற்றையெல்லாம் உங்களுக்கு கூறுகின்றனர், அதனை அறிந்துகொண்டு உங்களுக்கு தெரிந்தமாதிரி இங்கு கூறுகின்றீர்கள் என்பது எமக்கும் தெரியும். ஆனால் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜனாதிபதிக்கு பொய்கூறினர், அமைச்சரவைக்கு பொய்களை கூறினார், பாராளுமன்றத்திற்கு பொய்களை கூறனார், மக்களுக்கு பொய்களை கூறினார், விவசாயிகளுக்கு பொய் கூறினார், நுகர்வோருக்கு பொய் கூறினார். இதனால் தான் விவசாயத்துறை பாரிய நெருக்கடிக்குள் வீழ்ந்து அரசாங்கம் தவறான பாதையில் சென்றது. இந்த காலகட்டத்தில் அரசாங்கம் பாரிய அவப்பெயரை சந்திக்க பிரதான காரணம் அமைச்சர் மஹிந்தானந்தவின் செயற்பாடும், நடத்தையுமேயாகும். அதுதான் உங்களின் உருவ பொம்மையை எரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. உங்களின் உருவ பொம்மையை நீங்களே தான் எரித்துக்கொண்டுள்ளீர்கள். மாறாக மக்கள் அல்ல என சரமாரியாக வார்த்தைகளில் தாக்கினார்.

இதன்போது மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் மஹிந்தானந்த,

ஜனாதிபதியை திருப்திபடுத்த நான் பொய் கூறவில்லை. அதேபோல் என்னால் தான் விவசாயத்துறை நாசமாகியதாக கூறினார். ஆனால் நான் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டத்துடன் உள்ளேன். அதற்கமையவே செயற்படுகின்றேன். ஈஸ்டர் தாக்குதல் குறித்தும் என்னால் கூற முடியும், நான் கூறுவதால் மைத்திரிபால சிறிசேனவிற்கு வலித்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. கொள்கையுடன் நான் உள்ளேன், நான் யாருடைய காலைவாரும் செயற்பாடுகளையும் செய்யவில்லை என்றார்.

வேடிக்கை பார்த்த எதிர்கட்சிகள்

அரசாங்கத்தில் பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட இந்த வார்த்தை மோதலின் காரணமாக பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல எதிர்க்கட்சிகளும் சபையில் அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.