வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு (Gas cylinder blast) சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எரிவாயு விபத்துக்கள் (Gas cylinder blast) இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதனால் மின்சார கட்டமைப்புகளை சோதனையிட்டு பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்துக் கொள்ளுமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அந்த இடங்களில் உள்ள திரவ பெற்ரோலிய வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளமையினால், மின்சார சுவிட்ச் மூலம் ஏற்படும் தீப்பொறி பாதிப்பை ஏற்படுத்திவிட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டில் எரிவாயு நாற்றம் வீசினால் மின்சார குமிழிகளை ஒளிர செய்யாமல், கதவு, ஜன்னல்களை திறக்காமல், நாற்றம் குறையும் வரை சமையல் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம் என அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் எரிவாயு கொள்கலன்களில் நிரப்பப்படும் எரிவாயுவின் கலவை குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
நாட்டின் பிரதான எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிற்றோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் கொள்கலன்களில் இருந்து நேற்றைய தினம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார பாதுகாப்பு அமைச்சர் லசந்த அலகியவன்ன நேற்று இது பற்றி அறிவித்துள்ளார்.எரிவாயு மாதிரிகள் இன்று ஆய்வுகூட பரிசோதனைக்காக இன்று பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.