ஹட்டன் வில்பட்புரம் பகுதியில் வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று சமைக்க முற்படும் போது கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் எரிவாயுவால் நிரம்பியதாகவும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பட்புரம் பகுதியில் இன்று 04.12.2021 இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் இன்று பகல் சமையலை முடித்துவிட்டு இரவு சமைப்பதற்காக கேஸ் சிலிண்டரை எரிவாயு அடுப்பினை பற்றவைக்க முற்பட்டபோது திடிரென எரிவாயு மணத்துடன் கசிவு ஏற்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்த நான்கு பிள்ளைகளையும் அயலவர் வீட்டில் நிறுத்தி அயலவரின் உதவியுடன் கேஸ் சிலிண்டரை வெளியில் அகற்றியதாகவும் தெரிவித்தார்.
குறித்த வீட்டின் பெண்மனி கதவு ஜன்னல்களை திறந்து விட்டதன் காரணமாகவும் நெருப்பு மூட்டுவதனை தவிர்த்ததன் காரணமாகவும் ஏற்படவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த எரிவாயு சிலிண்டர் 15 நாட்களுக்கு முன் அட்டன் மல்லிகைப்பூ சந்தியில் உள்ள கடையொன்றில் கொள்வனவு செய்ததாகவும் கசியும் வரை முழுமையாக எரிவாயு நிரம்பியிருந்ததாகவும் கசிவின் பின் முழுமையாக எரிவாயு வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்