பாகிஸ்தான் – பஞ்சாப் மாநிலம், சியல்கோட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜை பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
பிரியந்த குமாரவின் உடல் இன்று (08) கனேமுல்லை பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன் தினம் பூரண அரச மரியாதையுடன் பிரியந்த குமாரவின் உடல் பாகிஸ்தானின் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நேரடியாக நீர் கொழும்பு, மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு நேற்று முன் தினம் இரவு பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன. நீர்கொழும்பு விஷேட சட்ட வைத்திய அதிகாரி லங்கரத்ன, குருணாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசிங்க ஆகியோர் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
அதன் பின்னர் உடல் நேற்று (07) கனேமுல்ல, கந்தலியத்த பாலுவ பிரசேத்தில் அமைந்துள்ள பிரியந்த குமாரவின் இல்லத்திற்கு அதிகாலை 2.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து தொடர்ச்சியாக பலரும் அவரது இல்லத்திற்கு சென்று சடலத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியலாளராக பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பிரியந்த குமார, முதலில் இலங்கையில் பிரண்டிக்ஸ் ஆடை உற்பத்தி நிலையத்தில் சேவையாற்றியதுடன் அதன் பின்னர் 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.
48 வயதான அவர் இரு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.