வாரத்தில் வேலை நாட்களை ஐந்திற்கு பதிலாக நான்கரை நாட்களாக குறைந்து, இன்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை மதியம், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டரை நாட்கள் வார இறுதி விடுமுறையாக கொள்ளப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து துறைகளும் 01 ஜனவரி 2022 முதல் இந்த புதிய முறைக்கு மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவிய ஐந்து நாள் வாரத்தை விட குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இனி இங்கு வேலை வாரம் திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகலில் முடிவடையும். மத்திய அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை, அதாவது ஒரு நாளைக்கு 8.5 வேலை நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் 4.5 மணி நேரம் வேலை செய்வார்கள்.
மேலும், வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் இலகுவாக வேலை செய்யக்கூடிய முறைகளை தேர்ந்தெடுத்தல் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நீண்ட வார இறுதியானது உற்பத்தித்திறனை அதிகரிப்பதையும், வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.