நாட்டில் தற்போதுள்ள இதே நிலை இவ்விதமாகவே சென்றால் சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமல்ல, மக்களின் இருதயமும் வெடித்து சிதறும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 1977 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இலங்கை இப்படியான அனர்த்தத்தை எதிர்நோக்கியது. மீண்டும் அதே யுகத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கின்றது.
1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையை முடிவுக்கு கொண்டு வந்த நாட்டுக்கு மீண்டும் சௌபாக்கிய நிலைமையை ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்படுத்திக்கொடுத்தது.
நாட்டில் தற்போதுள்ள இதே நிலைமையின் அடிப்படையில் இவ்விதமாகவே சென்றால் சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமல்ல, மக்களின் இருதயமும் வெடித்து சிதறும்.
அரசாங்கம் உலகில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடம் சென்று கடனுதவியை பெறாது, வட்டி முதலாளிகளிடம் சென்று கடனை பெற்றது.
இவ்வாறு கடன் முதலாளிகளிடம் பெறும் பணத்தை கொள்ளையிட முடியும் என்பதால், அரசாங்கம் அவ்வாறு செய்தது என தெரிவித்தார்