காலி கிளடியேட்டர்ஸ் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

0
197

லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தம்புள்ளை ஜெய்ன்ட் அணியை ஒன்பது ஓட்டங்களினால் தோற்கடித்த காலி கிளடியேட்டர்ஸ், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அடுத்த சுற்றுக்கு நுழைந்துள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி நேற்றிரவு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

மழை காரணமாக போற்றி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டமையினால் ஆட்டம் 14 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் களத்தடுப்பினை தேர்வுசெய்ய காலி கிளடியேட்டர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி 7 விக்கெட் இழப்புக்கு 134 ஒட்டங்களை பெற்றது.

நடுவரிசை வீரர்களினால் ஓட்டங்களை பெற முடியாவிட்டாலும், தலைவர் பானுக ராஜபக்ஷ, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலகே ஆகியோரின் துடுப்பாட்டம் அணிக்கு வலு சேர்த்தது.

குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி வேகமான தொடக்கத்தை ஏற்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 17 பந்துகளில் 30 ஓட்டங்களை சேர்த்தது.

பின்னர் குணதிலக்க 22 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இம்ரான் தாகீரின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

தொடர்ந்து மெண்டிஸுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 20 பந்துகளில் 38 ஓட்டங்களை குவித்தார் பானுகா ராஜபக்ஷ.

இந் நிலையில் 7 ஆவது ஓவரின் முதல் பந்தில் குசல் மெண்டீஸ் 17 பந்துகளில் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க காலி கிளடியேட்டர்ஸின் ஓட்ட வேகம் குறைவடைந்தது.

எவ்வாறெனினும் மட்டுப்படுத்தப்பட்ட 14 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை குவித்தது காலி கிளடியேட்டர்ஸ்.

பின்னர் 84 பந்துகளில் 135 ஓட்டம் என்ற இலக்கை துரத்திய தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.

அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல முதலாவது ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் டக்கவுட் ஆன போதிலும் இரண்டாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த பில் சால்ட் மற்றும் ஜனித் லியனகே ஜோடியினர் 90 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

இவர்களின் இணைப்பாட்டம் வலுவாக இருந்த போதிலும் இறுதியில் தம்புள்ளை அணியினரால் வெற்றி இலக்கினை அடைய முடியவில்லை.

பிலிப் சால்ட் 29 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜனித் லியனகே 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜனித் லியனகே அண்மையில் நிறைவடைந்த அனைத்துக் கழகங்களுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ராகம விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி 7 போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 3 அரை சதங்களுடன் 139 ஓட்டங்களின் சராசரியுடன் 419 ஓட்டங்களை பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த வெற்றியின் மூலம் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது காலி கிளடியேட்டர்ஸ்.

நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சற்றுக்கு ஜப்னா கிங்ஸ், தம்புள்ளை ஜெய்ன்ட் மற்றும் காலி கிளடியேட்டர்ஸ் நுழைந்துள்ள நிலையில் அடுத்த சுற்றுக்கு இறுதியாக நுழையப் போகும் அணி எது என்ற கேள்வி தற்சமயம் எழுந்துள்ளது.

இதன்படி, போனஸ் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி வோரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான எதிர்வரும் போட்டிகள் தீர்க்கமானதாக அமையும்.

இந்த இரண்டு அணிகளில், கொழும்பு கிங்ஸ் ஆறு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும் கண்டி வோரியர்ஸ் ஆறு போட்டிகளில் ஒரு வெற்றியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here