முதல் பார்வை – ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்

0
120

கடந்த பாகத்தின் இறுதியில் இருந்து படம் தொடங்குகிறது. வில்லன் மிஸ்டீரியோ இறக்கும் முன் பேசி வெளியிட்ட வீடியோவின் மூலம் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்கிற விஷயம் இப்போது ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது.

அந்த வீடியோவை வைத்து ஸ்பைடர்மேன்தான் மிஸ்டீரியோவைக் கொன்றுவிட்டார் என்று மீடியா செய்தி வெளியிடுகிறது. இதனால் பீட்டர் பார்க்கர், அவரது காதலி எம்ஜே, நண்பன் நெட், ஆண்ட் மே என அனைவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணை, வீட்டைச் சுற்றி எந்நேரமும் ஊடகங்கள் எனத் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். தன்னால் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்சினையைச் சரிசெய்து மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் உதவியை நாடிச் செல்கிறார் பீட்டர். இதற்கான மந்திரத்தை பிரயோகிக்கும்போது ஏற்படும் கோளாறால் மற்ற யுனிவர்ஸ்களில் பீட்டர் பார்க்கரைத் தெரிந்த பழைய வில்லன்கள் அனைவரும் வெளிப்படுகின்றனர். தன்னுடைய பிரச்சினைகளைச் சரிசெய்து வில்லன்களை பீட்டர் பார்க்கர்/ ஸ்பைடர்மேன் சமாளித்தாரா என்பதே ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்தின் கதை.

பொதுவாக மார்வெல் படங்களின் ட்ரெய்லர் வெளியாகும்போதே என்னவெல்லாம் இருக்கப் போகிறது, யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பதை ரசிகர்கள் முன்கூட்டியே கணித்துச் சொல்வது ஒவ்வொரு மார்வெல் படத்தின் போதும் நடக்கும் விஷயம்.

ஆனால் ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ பட விஷயத்தில் ஒருபடி மேலே போய் பட அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தில் வரப்போகும் விஷயங்கள் இதுதான் என ரசிகர்கள் தனித்தனியாகப் பிரித்துச் சொன்னது நடந்தது. வழக்கமாக மார்வெல் படங்களைப் பெரிய திரையில் பார்ப்பதே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையைக் கொடுக்கும். அந்தக் கொண்டாட்ட மனநிலையை மார்வெல் ரசிகர்களுக்கு இப்படம் கொடுத்திருக்கிறதா என்றால் நிச்சயமாக ஆம் என்றே சொல்லவேண்டும்.

படத்தின் கதையென்று பார்த்தால் வழக்கமான சூப்பர் ஹீரோ படங்களின் கதைதான். ஹீரோவுக்கு ஒரு பிரச்சினை, அதனால் அவருக்கு நெருக்கமானவர்கள் பாதிக்கப்படுவது, அதைச் சரி செய்யும் முயற்சியில் ஹீரோ தோல்வி அடைவார். பின்னர் அதனை வேறு வழியில் எதிர்கொண்டு வெற்றி அடைவார். அதே ஃபார்முலாதான் இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட மேலே முதல் பாராவில் சொல்லப்பட்ட கதை ட்ரெய்லரிலேயே சொல்லப்பட்டுவிட்டது. அதுதான் முதல் பாதியும் கூட. ஏற்கெனவே முந்தைய ‘வாண்டாவிஷன்’ ‘லோகி’, ‘வாட் இஃப்’ உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் ஓரளவு பேசப்பட்ட மல்டிவெர்ஸ் கான்செப்ட் இதில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் மார்வெல் படங்களில் மல்டிவெர்ஸ் என்பது ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கப் போகிறது.

முதல் பாதி முழுக்கவே பெரிய ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் வசனங்களிலேயே நகர்கிறது. மற்ற யுனிவர்ஸ்களிலிருந்து வில்லன்கள் வெளிப்படும் காட்சியில் ஒரு மிகப்பெரிய சண்டை நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் வேளையில் அதை அப்படியே அமுக்கிவிடுவது ஏமாற்றம்தான். இதனால் முதல் பாதியில் அங்கங்கு தொய்வு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. மார்வெல் படங்களின் மிகப்பெரிய பலமே அவற்றின் நகைச்சுவை வசனங்கள்தான். அதை இந்தப் படத்திலும் மிகச் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஜான் வாட்ஸ்.

இரண்டாம் பாதியில் ரசிகர்கள் ஏற்கெனவே கணித்த விஷயங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் எதிர்பார்த்ததற்கும் மேல் காட்சிகளாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதி முழுக்கவே ரசிகர்கள் இருக்கையில் இருந்து துள்ளிக் குதிக்கிறார்கள். இடைவேளை முடிந்து படம் தொடங்கியது முதல் இறுதி வரை திரைக்கதை எங்குமே நிற்கவில்லை. இரண்டாம் பாதியில் எந்தக் காட்சியைப் பற்றிப் பேசினாலும் அது ஸ்பாய்லராகி விடும் என்பதால் இதற்கு மேல் விரிவாகச் சொல்ல இயலாது.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் இறுதியில் வரும் எமோஷனல் காட்சிகள். படம் முழுக்க ரசிகர்களுக்கு இருக்கும் கொண்டாட்ட மனநிலையை அப்படியே எமோஷனலாக மாற்றிக் கண்கலங்க வைத்ததில் ஜெயித்துள்ளார் ஜான் வாட்ஸ். முந்தைய மார்வெல் படங்களைப் போலவே பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இதிலும் உண்டு. குறிப்பாக முதல் பாதியில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சுக்கும் ஸ்பைடர்மேனுக்கும் இடையே நடக்கும் அந்தத் துரத்தல் காட்சி ஒரு உதாரணம். இதைப் போல பல காட்சிகள் படத்தில் உண்டு. பெரிய திரையில் பார்ப்பது நலம்.

இது ஸ்பைடர்மேனுக்கான படம் என்பதால் டாக்டர் ஸ்ட்ரேஞ்சுக்குப் பெரிய அளவில் காட்சிகள் இல்லை. எனினும் போஸ்ட் க்ரெடிட் சீனில் அவருக்கான ஒரு முக்கியமான லீட் உள்ளது. வழக்கமாக சிறு சிறு காட்சிகளை மட்டுமே போஸ்ட் க்ரெடிட் சீன்களில் இடம்பெறச் செய்யும் மார்வெல் இதில் ஒரு மினி டீஸரையே விட்டுள்ளது. அதேபோல நெட் கதாபாத்திரத்தின் எதிர்காலம் இனி என்னவாக இருக்கப் போகிறது என்பதற்கான குறிப்பும் படத்தில் உள்ளது.

டாம் ஹாலண்ட், ஸெண்டாயா, பெனடிக்ட் கும்பர்பேட்ச், மரிஸா டோமி, என நடிகர்கள் அனைவருமே குறை சொல்லமுடியாத சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக க்ளைமாக்ஸில் டாம் ஹாலண்டின் நடிப்பு பாராட்டப்படவேண்டிய ஒன்று.

பழைய வில்லன்கள், ரசிகர்களின் தியரி எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாகப் பூர்த்தி செய்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here