முதலாளிமார் சம்மேளனத்தினை எச்சரித்தார் பாரத் அருள்சாமி

0
128

2021 ஆம் ஆண்டின் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் இறுதி கூட்டம் இன்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது. சபை கூட்டத்தில தொழில் அமைச்சின் செயலாளர் தொழில் ஆணையாளர் தொழில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளும் பல்துறை சார்ந்த முதலாளிமார் களின் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொழில் துறையின் பாதுகாப்பு, நாட்டின் உற்பத்தி தொடர்பாகவும் இது வெகுவாக கலந்துரையாடப்பட்டது. தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதேபோன்று உற்பத்திக்கு முதலாளிமார் எதிர்நோக்கும் சவால்களும் முன் கொண்டு வரப்பட்டது. இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு தோட்ட நிர்வாகங்களின் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பாரத் அருள்சாமி சபை கூட்டத்தில் தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையின் ஊடாக அவர்களின் வேதனம் அதிகரிக்கப்பட்டு இருப்பினும் கம்பெனிகள் திட்டமிட்ட முறையில் எமது தொழிலாளர்களின் உழைப்பை சூறையாடுவது மட்டுமன்றி வெவ்வேறு கோணங்களிலும் வஞ்சிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேயிலைக் கொழுந்து இல்லாத காலகட்டத்திலும் 20 கிலோவுக்கு அதிகமான கொழுந்து பறிக்குமாறும் அவ்வாறு குறைவாக இருக்கும் பட்சத்தில் நாள் வேதனத்தை கிலோ வேதனமாக மாற்றி அவர்களுக்கு கிடைக்கப் பெறவேண்டிய சட்டரீதியான கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாமல் பெரும் சிக்கல்களுக்குள் ஆளாகியுள்ளனர் மேலும் நாம் ஒரு தொழிற்சங்கமாக நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த எத்தனிக்கும் சந்தர்ப்பத்தில் கம்பெனிகளின் தான்தோன்றித்தனமான போக்கு மற்றும் நீதிமன்றத்தின் கீழுள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி கம்பெனிகள் பேச்சுவார்த்தைகளை தட்டிக்கழித்து வருவதாகவும் பாரத் அருள்சாமி தெரிவித்தார். மேலும் இவ்வாறான செயல்பாடுகளின் காரணமாக இன்று தொழிலாளர்களாகவே பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர் நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கமாக மக்களை சிரமத்திற்கு ஆள்படுத்தாது பேச்சு வார்த்தையின் மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வுக்கான முயற்சி செய்கின்றோம். இருப்பினும் கம்பெனிகள் தொடர்ந்து அப்பாவி தொழிலாளர்களை வஞ்சிக்கு மேயானால் நாம் பாரதூரமான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் எனவும் பாரத் முதலாளிமார் சம்மேளனத்தினை எச்சரித்தார்.

அதுமட்டுமல்லாது மாவட்ட ரீதியில் உள்ள தொழில் திணைக்கள காரியங்களின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் மந்த கதி அடைந்துள்ளதாகவும் தொழில் நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த வேதன உயர்வு சரியான முறையில் மக்களின் கைகளில் சென்றடைய ஓர் வழிமுறையினை தொழில் அமைச்சின் ஊடாக முன்மொழியும் மாறும் பாரத் அருள்சாமி கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தமக்கு பல முறைப்பாடுகள் இதைப்பற்றி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்நிலை தொடரும் எனில் தாம் பாராளுமன்றத்தில் இதனை ஒரு சட்டம் மூலமாக கொண்டு வந்து தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க செயல்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் தொழிற்சங்கங்கள் ஒற்றுமை இழந்து தனது சுய விருப்பு வெறுப்புக்கு ஆளாகி நகர்வுகளை மேற்கொள்ளும் வேளையில் கம்பெனிகளும் ஏனைய அமைப்புக்களும் தொழிலாளர்களை வஞ்சிக்க முற்படுவார்கள் எனவே பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து செயல்படுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here