வெற்றி பெற்றுத் தருவார்களா இந்தியப் பந்துவீச்சாளர்கள்? தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் இலக்கு

0
98

செஞ்சூரியனில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் எல்கர் (15), பீட்டர்ஸன் (17) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

செஞ்சூரியன் ஆடுகளத்தில் 4-வது நாளான இன்றே பேட்ஸ்மேன்களால் ஆடமுடியாத அளவுக்குக் கடினமானதாக மாறிவிட்டது. பந்துவீச்சாளர்கள் வீசும் பந்து எந்தப் பக்கம் பிட்ச் ஆகிறது, எவ்வாறு வருகிறது எனத் தெரியாமல் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கிறது, இதில் கடைசி நாளான நாளை ஆடுகளம் இன்னும் மோசமான நிலைக்குச் சென்றால், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது கடினம்தான்.

கடைசி நாளான நாளைய ஆட்டத்தில் 2-வது செஷனுக்குப் பின்புதான் மழைக்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆதலால், மழை வருவதற்கு நாளை இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை முடித்துவிட வேண்டும்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதையடுத்து, 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை இன்று ஆடத் தொடங்கிய இந்திய அணி 50.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி ஏற்கெனவே இருந்த 130 ரன்கள் முன்னிலை மற்றும் 174 ரன்கள் ஆகியவற்றைச் சேர்த்து 305 ரன்கள் இலக்காகத் தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 50 ஓவர்களில் ஆட்டமிழந்துவிட்டதால், ஏறக்குறைய 48 ஓவர்கள் இன்னும் மிச்சமிருக்கிறது. இந்த ஓவர்களில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இந்தியப் பந்துவீச்சை சமாளித்து ஆட வேண்டும்.

செஞ்சூரியன் ஆடுகளோ நேரம் செல்லச் செல்ல, வெயில் அடிக்கும்போது, ஆடுகளத்தில் பந்து பட்டவுடன் எந்தப் பக்கம் திரும்புகிறது எனத் தெரியாமல் விர்ரென்று செல்கிறது. இதனால்தான் பல பந்துகளை பேட்ஸ்மேன்கள் லீவ் செய்யும்போதுகூட அது ஸ்டெம்ப்பில் பட்டு விக்கெட்டாக மாறிவிடுகிறது.

ஆடுகளத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தால் வெற்றி நிச்சயம். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் இதுவரை விளையாடாதவர்கள். தென் ஆப்பிரிக்கா என்றாலே சோக்க்ர்ஸ் என்ற வார்த்தையைக் கடினமான, நெருக்கடியான தருணங்களில் அவர்கள் உண்மையாக்கிவிடுவார்கள்.

ஆதலால், இந்த ஆடுகளத்தில் 305 ரன்களை சேஸிங் செய்வது மிகக்கடினம். பும்ரா, ஷமி, சிராஜ் மூவரும் லென் லென்த்தில் பந்துவீசி நெருக்கடி கொடுத்தாலே தாங்க முடியாமல் விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இழந்துவிடுவார்கள். ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் வெற்றி பந்துவீச்சாளர்கள் கரங்களில் இருக்கிறது.

2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. கேப்டன் கோலி (18), புஜாரா (16), ரஹானே (20) தூண்கள் எனப் பேசப்பட்டவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் கோலி இரு இன்னிங்ஸிலும் தேவையற்ற ஷாட்களை ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தார். புஜாராவுக்கு வாய்ப்பு கொடுத்தது போதும், அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி, பிரயங்க் பஞ்ச்சலைக் களமிறக்கி சோதிக்கலாம்.

அதேபோல ரஹானேவைக் கழற்றவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். ரிஷப் பந்த் அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் ரிஷப் பந்த்துக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பது எக்ஸ்ட்ராஸ் 27 ரன்களதான். எந்த பேட்ஸ்மேனும் எக்ஸ்ட்ராஸ் ரன்களைக் கூட தாண்டவில்லை.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா, அறிமுக வீரர் ஜான்ஸன் தலா 4 விக்கெட்டுகளையும், இங்கிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here