தென் ஆப்பிரிக்காவை 113 ரன்களில் வீழ்த்தியது இந்தியா.

0
89

பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சின் துணையுடன், செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என்று சொல்லப்படும் செஞ்சூரியன் மைதானத்தில் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டார். முதல் இன்னிங்ஸில் அவர் குவித்த 123 ரன்களே இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.

ராகுல் அபாரம்: இப்போட்டியில், கே.எல்.ராகுலின் அட்டகாசமான சதத்தின் துணையுடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 327 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தன. இதையடுத்து, 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி 50.3 ஓவர்களில் 174 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 305 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

செஞ்சூரியன் ஆடுகளம் நேரம் செல்லச் செல்ல பவுலிங்குக்கே சாதகமான இருந்ததால் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா போலவே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கும் பெரும் சவாலானது. இந்த ஆடுகளத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்று கணிக்கப்பட்ட நிலையில், நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, இப்போட்டியில் வெற்றி பெற இன்னும் 211 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி நாளான இன்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில், 86 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 113 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணியில் எல்கார் 77 ரன்களும், பவுமா ஆடமிழக்காமல் 35 ரன்களும், குவின்டன் டீ காக் 21 ரன்களும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் பும்ரா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் பும்ராவின் பங்களிப்பு மகத்தானது. அவர்தான் ஆரம்பத்திலிருந்தே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.

முன்னதாக, 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. கேப்டன் கோலி (18), புஜாரா (16), ரஹானே (20) தூண்கள் எனப் பேசப்பட்டவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி இரு இன்னிங்ஸிலும் தேவையற்ற ஷாட்களை ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஷமி சாதனை: தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 5-வது விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தை ஷமி பெற்றார். கபில்தேவ் (434), இசாந்த் சர்மா (311), ஜாகீர்கான் (311), ஜவஹல் ஸ்ரீநாத் (236) ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் சாய்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் ஷமி இருக்கிறார்.

ரிஷப் பந்த் சிறப்பிடம்: செஞ்சூரியன் போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது டிஸ்மிஸல் செய்து புதிய மைல்கல்லை எட்டி சிறப்பிடம் பெற்றதும் கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here