2022 மக்களுக்கு விடிவை தரும் ஆண்டாக மலர வேண்டும். புத்தாண்டு வாழ்த்துச்செய்தி.

0
164

” பொருட்களின் விலையேற்றம், பொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவையால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களை இருள் சூழ்ந்துள்ளது. நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு வழி பிறக்காதா என காத்திருக்கின்றனர். எனவே, மலரும் புத்தாண்டாவது மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஆண்டாக அமையட்டும். அதற்கான சூழ்நிலையை அரசு உருவாக்கி கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியவை வருமாறு,

” 2020 பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் கொரோனா தொற்று பரவிவருகின்றது. அன்று முதல் இன்றுவரை குறித்த வைரஸ் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன பொது முடக்கம், சுற்றுலாத்துறை வீழ்ச்சி, வணிகத்துறையில் பின்னடைவு உள்ளிட்ட காரணங்களால் பலர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2020 முதல் வலி சுமந்த வாழ்க்கையையே எமது நாட்டு மக்கள் வாழ்ந்துவருகின்றனர். 2021 இலாவது வழி பிறக்கும் என நம்பினோம். அது நடக்கவில்லை. நெருக்கடிகள் உச்சம் பெற்றுள்ளன.

அதேபோல நெருக்கடியான சூழ்நிலைகளில்கூட எமது பெருந்தோட்ட மக்கள் தொழிலுக்கு சென்றனர். பொருளாதாரம் பூஜ்ஜிய நிலைக்கு வராமல் இருப்பதற்கு பங்களிப்பு செய்தனர். அந்நிய செலாவணிகூட அவர்களால்தான் ஓரளவு வந்தது. ஆனால் அம்மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் என்பது முறையாக கிடைக்கவில்லை. எல்லா வழிகளிலும் அவர்கள் தோட்ட நிர்வாகங்களால் வஞ்சிக்கப்பட்டனர். பழிவாங்கப்பட்டனர். எனவே, 2022 ஆவது அந்த மக்களுக்கு விடிவைத் தரவேண்டும். தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்களின் நலன்கள் குறித்தும் முழுமையாக கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களுக்கும் கடந்தாண்டு வலிகளையே அள்ளி வழங்கியது.

அதேவேளை, கொரோனாமீது மட்டும் பழிசுமத்திவிட்டு அரசு மௌனம் காக்க முடியாது. தனது தவறான கொள்கைகளும் நெருக்கடி நிலைக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு, எதிரணிகளின் ஆலோசனைகளையும் உள்வாங்கி புதியதொரு பயணத்தை – அதாவது மக்களுக்கான பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மக்களும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும். தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும். 2022 ஆம் ஆண்டிலிருந்தாவது மீளெழுச்சி பெறுவதற்கான பயணத்தை ஆரம்பிப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.” – என தன் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here