கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையிலும் கூட நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் ஆறு பாதைகள் காபட் இடப்பட்டுள்ளது. ஒரு பிரதேசம் அபிவிருத்தி காணவேண்டும் என்றால் பாதை அபிவிருத்தி மிக முக்கியமானது இந்நிலையில் சலங்கந்த என்பீல்ட் பாதை சுமார் 113 லட்சம் ரூபா செலவில் இன்று (01) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இதற்காக அரசாங்கத்திற்கும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் நன்றி தெரிவிப்பதாக நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே. ரவி தெரிவித்தார்;.
ஹட்டன் டிக்கோயா சலங்கந்த என்பீல்ட் பிரதான பாதை கடந்த காலங்களில் குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையில் காணப்பட்டது. ஐந்தரை கிலோமீற்றர் நீளமான குறித்த பாதையின் ஒரு கிலோ மீற்றர் தூரம் (880 மீற்றர்.) வரை முதல் கட்டமாக இன்று (01) புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த பாதையினை காபட் இட்டு அபிவிருத்தி செய்வதற்காக பால் பொங்கி, பூஜை செய்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இன்று நாட்டில் பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது ஆனால் ஜனாதிபதி அவர்களும் அரசாங்கமும் கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களும் நோர்வூட் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து இன்று நடைபெற்று வருகிறது. தோட்டப்பகுதியில் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை காணப்படுகின்றது எனினும் கம்பனிகளுக்கிடையிலான வழக்கு பிரச்சினை தீர்ந்த உடன் நிச்சயமாக அதற்கான தீர்வினை ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுப்பார். அத்தோடு மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கான திட்டங்களையும் எதிர்காலத்தில் முன்னெடுப்பார் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
குறித்த பாதை காபட் இட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்துள்ளதனால் குறித்த பாதையூடான பொது போக்குவரத்து மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்தார். குறித்த பாதையின் காபட் இடும் பணிகள் மாகாண வீதி அபிவிருத்தி சபையினுடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பாதை அபிவிருத்தி செய்வதன் மூலம் என்பீல்ட், எட்லி, சலங்கந்த உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நன்மையடைய உள்ளனர்.
இந்நிகழ்வுக்கு நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்களான அருள் நாயகி, எலக்சாண்டர் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்