தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது தைத்திருநாள் இதனை உலக வாழ் மக்கள் உழவர் திருநாளாக கொண்டாடுகின்றனர்.நாளை மலர உள்ள தைத்திருநாளினை முன்னிட்டு கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொன்று தொட்டு பேணி வந்த மரபு ரீதியான தைத்திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மலையகத்தில் தோட்டப்புறங்களில் வாழும் மக்கள் சமயத்திற்கு முக்கியத்துவமளித்து பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் மாத்திரம் கொள்வனவு செய்து இம் முறை தைத்திருநாளினை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். தை பிறந்தால் வழி பிறக்கும’ என்ற நம்பிக்கையில் பலர் பழையதனை அகற்றி வீட்டினை சுத்தம் செய்து மா,வாழை,கரும்பு பாலை போன்றனவற்றால் வீடு வர்த்தக நிலையங்கள் ஆகியன அலங்கரிக்கப்பட்டு தைதிருநாளினை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.
இதனால் மலையக நகரங்களில் இன்றைய தினம் கரும்பு. பாலை, பழம் வெற்றிலை பாக்கு, போன்ற பொருட்கள் விற்பனை சூடுபித்திருந்தன. தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாள் என்பது மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுப்;படுகின்றது. தமது வாழ்வாதாரத்திற்காக உதவிய இயற்கைக்கும் கால் நடைக்கும் நன்றி கூறும் முகமாக குறித்த தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது.
இந்த தைப்பொங்கல் தினத்தன்று தமிழர்கள் புதுப்பானையில் புதிதாக அறுவடை செய்த நெல்லினை அரிசியாக்கி அதனை பானையில் இட்டு மஞ்சல் விபூதி,குங்குமம் உள்ளிட்ட அபிசேக பொருட்களை பானையில் சாத்தி பானையினை கோலமிட்டு அலங்கரித்து பொங்கலிடுவது தொன்று தொட்டு மரபு ரீதியாக வந்த ஒரு செயப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாரம்பரிய மரபினை மக்கள் இன்றும் நினைவு கூர்ந்து அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் எழுத்து நீராடி வீடு வாசல் கழுவி வாசலில் கோலமிட்டு அடுப்பு மூட்டி இயற்கை நாயகனாக காணப்படுகின்ற சூரிய பகவானுக்கு பால் பொங்கல் வைத்து முதலில் வழிபட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.
இதே வேளை இன்றைய தினம் அத்தியவசிய மற்றும் பூசை பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மலையகத்தில் உள்ள ஹட்டன் டிக்கோயா, நோர்வூட் உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வருகை தந்திருந்தனர்.
மலைவாஞ்ஞன்