தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன்! மனம் திறந்தார் பிரதமர் மகிந்த

நாட்டில் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் அனைத்து வழிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டின் சமகால நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நாடு தற்போது சகல வழிகளிலும் பின்னடைவைச் சத்துள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்குக் கொரோனாப் பெருந்தொற்றே காரணம். இதை மக்கள் நன்குணர்வார்கள். ஆனால், எதிரணியினர் இந்த நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றனர். அவர்கள் நாடடெங்கும் சென்று அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.

எதிரணியினரின் இந்தப் பொய்ப் பிரசாரங்களை எமக்கு ஆணை வழங்கிய மக்கள் நம்பவேமாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு உண்மை நிலைவரம் தெரியும். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்தது.இந்தக் கட்சியால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கொண்ட எமது அரசை ஒருபோதும் வீழ்த்தவே முடியாது. இவ்வருடத்தில் நாடு முன்னோக்கிச் செல்லும் வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம்.

அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் என அனைத்து வழிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும்” – என்றார்.