19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடரின் குழு ‘டி’ யில் இடம்பெற்ற ஓர் ஆட்டத்தில் இலங்கை, 4 விக்கெட்டுகள் மற்றும் 78 பந்துகள் மீதமிருந்த நிலையில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது.
ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வருகின்றது.
தொடரின் ஒன்பதாவது ஆட்டம் திங்கட்கிழமை செயின்ட் கிட்ஸில் அமைந்துள்ள கொனாரி ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டு மைதானத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இலங்கை அணியின் பந்துப் பரிமாற்றங்களை எதிர்கொள்ள திக்குமுக்காடியது.
இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் காம்ப்பெல் கெல்லவே மாத்திரம் 54 ஓட்டங்களை பெற்றார். ஏனைய வீரர்கள் சொல்லும்படியான ஓட்டங்களை பெறவில்லை.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் துனித் வெல்லலகே 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அவர் தவிர டிரெவின் மெத்யூ, மதீஷ பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சதீச ராஜபக்ஷ ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.
176 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கைக்கு அணியின் ஆரம்ப வீரர்கள் கைகொடுக்கவில்லை. அதனால் 49 ஓட்டங்களுக்குள் அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளும் சரிந்தன.
எனினும் அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களின் பொறுப்பான ஆட்டம் அணியை வெற்றியின் பாதைக்கு கொண்டு சேர்த்தது.
குறிப்பாக 5 ஆவது வீரராக களமிறங்கிய அணித் தலைவர் வெல்லாலகே 71 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார். அவர் தவிர அஞ்சல பண்டார 33 ஓட்டங்களையும் மற்றும் ரனுத சோமரத்ன 32 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இறுதியாக இலங்கை 37 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்கை கடந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுகள் மத்திரம் 52 ஓட்டங்களை குவித்த இலங்கை அணித் தலைவர் துனித் வெல்லாலகே தெரிவானர்.
இந்த வெற்றி தொடரில் இலங்கை அணி பெறும் இரண்டாவது வெற்றியாகும். இதற்கு முன்னர் குழு ‘டி’ யில் இடம்பெற்ற மற்றொரு ஆட்டத்தில் இலங்கை, ஸ்கொட்லாந்து அணியை 40 ஓட்டங்களினால் தோற்கடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.