பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 59 சுகாதார நிலையங்கள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதுடன், ஒட்டுமொத்தமாகவுள்ள 450 சுகாhதர நிலையங்களையும் சுகாதார அமைச்சின் கீழ் கொண்வரப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
“பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் தோட்ட வைத்தியசாலைகள் எவ்வித அடிப்படை வசமிகளுமின்ற தோட்ட நிர்வாகத்தால் கொண்டுநடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் முழுகெலும்பாகவுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கும் முறையான சுகாதாரத்தை வழங்காதிருந்த வரலாற்று தவறுக்கு கடந்தகாலத்தில் ஆட்சிசெய்த அத்தனை ஆட்சியாளர்களும் அரசாங்கங்களும் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். முறையாக செயற்பட்டிராத மலையகத் தலைமைகளுக்கும் இதில் பங்குண்டு.
என்றாலும், கடந்த நால்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை தேசிய சுகாதார கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கான பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 52 நாட்கள் ஆட்சிக்கவிழ்ப்பு உள்ளிட்ட அரசியல் நெருக்கடிகளால்; அந்த விடயம் முழுமை பெறாது போனது.
ஆனால், பெருந்தோட்ட வைத்தியசாலைகளை தேசிய சுகாதார கட்டமைப்பில் இணைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த ஆணவங்களின் ஊடாக தற்போதைய அரசாங்கம் முதல்கட்டமாக 59 தோட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சுடன் இணைக்க நடவடிக்கையெடுத்துள்ளது. இதனை வரவேற்கிறோம். எமது மக்களினதும் ஐ.தே.கவினதும் நீண்டகால எதிர்பார்ப்பும் இதுதான்.
இதேவேளை, ஒட்டுமொத்தமாகவுள்ள 450இற்கும் அதிகமான தோட்ட சுகாதார நிலையங்களையும் தேசிய சுகாதார கட்டமைப்புக்குள் இணைக்க வேண்டும். அதற்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு ஐ.தே.க தயாராகவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.