அட்டனில் டிக்கோயாவில் பஸ் விபத்து – ஒருவர் பலி – 16 பேர் காயம்

0
157

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை – அட்டன் பிரதான வீதியின் தரவளை பட்டல்கலை பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன், 16 பேர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து 28.01.2022 அன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சலங்கந்தை பகுதியிலிருந்து அட்டனில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போது வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

எதிரே வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு இடம் கொடுக்க முயன்ற போதே, குறித்த தனியார் பஸ் இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா போடைஸ் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பெர்ணாண்டோ மரியசவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பஸ்ஸின் சாரதி அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை அட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here