எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.

0
186

” எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அதேபோல எமது ஆட்சியின்கீழ் மலையகத்துக்கான அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக 2022 அண்டு வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட கிராமத்திற்கான ஒரு லட்சம் வேலைத்திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடாளவிய ரீதியில் இன்று (03) காலை 8.52 இற்கு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டம் மலையகத்தில் தோட்டம் மற்றும் கிராம புறங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் அவர்களின் பங்களிப்பில் கினிகத்தேனை யட்டிபேரிய பௌத்த நிலையத்தில் மகர தோரணம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்தோடு, குயில்வத்தை பகுதியில் கடையுடன் கூடிய வீட்டுத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை, பத்தனை திம்புள்ள தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கான பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்கள் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கலந்து கொண்டு மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, நாடு முழுவதிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் இன்று புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே எமது அரசு, இந்த நாட்டை பொறுப்பேற்றது. பல சிரமங்கள் இருந்தாலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. இன்றும் அதே வேகத்தில் செயற்படுகின்றோம். எனவே, அபிவிருத்தி திட்டங்கள் வெற்றியளிக்க மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

கொரோனா வைரஸால் நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எமது நாட்டில் மட்டுமல்ல உலகளவில் இந்த நிலைமையே காணப்படுகின்றது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது எமது தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அவர் மலையகத்துக்கு கொண்டுவந்தார். தற்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கின்றார். எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அமைச்சின் ஊடாகவும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் நாடு விரைவில் மீளும் என நம்புகின்றோம்.

அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அது ஜனாதிபதித் தேர்தலாக இருக்கட்டும், பொதுத் தேர்தலாக இருக்கட்டும், மாகாணசபைத் தேர்தலாக இருக்கட்டும். உள்ளாட்சி மன்றத் தேர்தலாக இருக்கட்டும். சவாலை எதிர்கொள்ள நாம் தயார்.” – என்றார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here