” மலையகத்துக்கான பல்கலைக்கழகம் வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும். விமர்சனங்களை முன்வைப்பவர்களால் அதை மட்டுமே செய்துகொண்டிருக்க முடியும். மக்களுக்கு காத்திரமான சேவைகளை ஆற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாலேயே முடியும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் ஊடாக SAVE THE CHILDREN நிறுவனத்தின் அனுசரனையுடன் தெரிவு செய்யப்பட்ட பிரஜா சக்தி நிலையங்களுக்கு சுமார்ட் போட் மற்றும் தகவல் தொழில்நுட்ப கூடம் ஆகியன தலா 20 இலட்சம் ரூபா செலவில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இன்று (19.02.2022) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு வைபவ ரீதியாக மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பிரஜாசக்தி நிலையத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பளாருமான பாரத் அருள்சாமி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, பிரஜாசக்தி செயற்திட்டத்தின் அதிகாரிகள், SAVE THE CHILDREN நிறுவனத்தின் முகாமையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வவுனியாவுக்கு பல்கலைக்கழகம் வந்துவிட்டது, மலையகத்துக்கு எப்போது வரும் என சிலர் இன்று கேள்விகளை எழுப்புவதுடன், அது தொடர்பில் எதிர்மறையான விமர்சனங்களையே முன்வைத்துவருகின்றனர். அவர்களால் இப்படியான விமர்சனங்களை முன்வைக்க மட்டுமே முடியும். மாறாக மக்களுக்கு சேவையாற்ற முடியாது. அந்த ஆக்கப்பூர்வமான பணியையும், கல்வித்துறையில் புரட்சியையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால்தான் முன்னெடுக்க முடியும்.
கேகாலை மாவட்டத்தில் சிட்டி கெம்பஸ் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நுவரெலியா மாவட்டத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. அதேபோல கண்டி, பதுளை மாவட்டங்களிலும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். 100 பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு வதிகளைக் காட்டியும் கல்வி, சுகாதாரம் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்புக்கு எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னுரிமை வழங்கிவருகின்றது. கட்சி, இன பேதமின்றி மக்களுக்கான சேவைகள் உரிய வகையில் சென்றடைகின்றன. இதனை சகித்துக்கொள்ள முடியாதவர்களே, மக்கள் மத்தியில் போலிகளை பரப்பி, எல்லா விடயங்களுக்கும் அரசியல் சாயம் பூசுகின்றனர். கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுத்தால்கூட அதிலும் குறை காண்கின்றனர்.
நல்லாட்சியின்போது அவர்கள் பாதியில் கைவிட்ட வீட்டுத் திட்டங்களைக்கூட எமது அமைச்சர்தான் முழுமைப்படுத்தினார். அதற்காக 675 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டம் மட்டுமல்லாது கண்டி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலும் அபிவிருத்திகள் இடம்பெற்றன. விரைவில் அவற்றுக்கு திறப்பு விழா நடத்தப்படும். விமர்சனங்களை மட்டுமே முன்வைப்பவர்கள் அவர்களின் வேலைய செய்யட்டும். நாம் மக்களுக்கான எமது சேவைகளை தொடர்வோம்.” – என்றார்.
க.கிஷாந்தன்