உக்ரைன், ரஷ்யாவுக்கிடையில் மோதல் காரணமாக தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் ஏற்படும்

0
180

” மாவட்டம் தாண்டிய அபிவிருத்தி பணிகளையே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்து வருகின்றது. மலையக மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் எமது சேவை தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி பன்வில ரங்கல பெரு தோட்டம் மற்றும் பன்வில ஆத்தல மேற்பிரிவு ஆகிய பகுதிகளில் 27.02.2022 அன்று நவீன வசதிகளுடன் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த பகுதியில் அமையவுள்ள இந்த நிலையமானது, ‘புள்ளக்காம்பரா’ அல்ல. இதனை சிறுவர் அபிவிருத்தி நிலையமென்றே விளிக்க வேண்டும். அதற்கேற்ற வகையிலேயே உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. கணனி முதல் தேவையான அனைத்து பயிற்சிகளும், வழிகாட்டல்களும் வழங்கப்படும். அதன்மூலம் சிறந்ததொரு முன் அனுபவத்துடன் எமது பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் காலடி எடுத்து வைக்க முடியும்.

எமது கோரிக்கைக்கமைய இத்திட்டத்துக்காக ஒன்றரை கோடி ரூபாவை ஒதுங்கிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றிகூற வேண்டும். ஏனெனில் வாக்குதான் எமது இலக்கெனில் இதனையும் நுவரெலியாவுக்குதான் செய்திருக்க வேண்டும். ஆனால் வாக்கு என்பது எமது நோக்கம் அல்ல. மக்கள் சேவையே பிரதானமானது. எமது மக்கள் வாழும் பகுதிகளுக்கெல்லாம் எமது பணிகள் சென்றடையும்.

கண்டி மாவட்டத்துக்கு ஆளுங்கட்சியின் சார்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்திருந்தால் பாரிய சேவைகளை முன்னெடுத்திருக்கலாம். ஆனால் எதிரணியில் இருப்பவரால் அதனை செய்யமுடியாது. அவர்களால் கோவில் மணி உள்ளிட்ட பொருட்களை மட்டுமே வழங்க முடியும். அதனை தாண்டி பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது. நாம் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும், எமது அமைச்சை பயன்படுத்தி, சேவைகளை செய்து வருகின்றோம்.

இப்பகுதியில் உள்ள வீதியை புனரமைத்து தருமாறு கோரியுள்ளனர். இதனையும் செய்துகொடுப்பதற்கு முயற்சிப்பேன்.

நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதகரித்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் அது இன்னும் அதிகரிக்கும். உக்ரைன், ரஷ்யாவுக்கிடையில் மோதல் இடம்பெறுகின்றது. இதனால் தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படும். இந்நிலையையும் நாம் சமாளிக்க வேண்டும். ” – என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here